|
உத்தங்க முனிவர் மிகச் சிறந்த தபஸ்வி. இமய மலைச் சாரலில் எண்ணற்ற வருஷங்கள் தவம் செய்தார். தினசரி நித்ய கர்மாக்களைச் செய்து, மூன்று வேளைநீராடி, அங்கு கிடைக்கும் பழங்களை உண்டு சமாதியில் ஆழ்ந்து விடுவது அவரது வழக்கம். முனிவரின் தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மா மகாவிஷ்ணுவிடம், தாங்கள் அவருக்குத் தரிசனம் கொடுத்து வேண்டிய வரங்களைத் தர வேண்டும் என்று வேண்டினார். மகாவிஷ்ணுவும் அதை ஏற்று உத்தகங்கருக்கு தரிசனம் தந்தார். சமாதி நிலை கலைந்த உத்தங்கர், பெருமாளைக் கண்டதும் போற்றி வணங்கினார். முனிவரே உமது தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார் மகாவிஷ்ணு. உத்தங்கர் மிகச்சிறந்த தபஸ்வி. ஆனால், கர்வம் கொண்டவர். அதனால், நான் இங்கு கணக்கில்லா ஆண்டுகள் தவம் புரிந்துள்ளேன். அவற்றை சரியாகக் கணக்கிட்டு அதற்கேற்ப தங்களால் எனக்கு என்ன வரம் தரமுடியுமோ அதைக் கொடுங்கள் என்றார்.
மகாவிஷ்ணு சிரித்தார். முனிவரே, கணக்கற்ற வருடங்கள் தவம் செய்த உங்களை இந்த பூமாதேவி தானே தாங்கி வந்திருக்கிறாள் என்றார். ஆம். பூமாதேவிதான் தங்கி வருகிறாள். தாங்கள் தவம் புரிந்தாலும், உயிர் வாழத்தேவையான தண்ணீரும் பழங்களும் உங்களது உபயோகத்தில் இருந்து சேவை செய்திருக்கின்றன அல்லவா? என்றார் மகாவிஷ்ணு. ஆம். இத்தனைக் காலம் நான் உயிருடன் வாழ அவைதாம் உதவின. அந்த நீரும் பழங்களும் பூமாதேவியின் அருளால் கிடைத்தவைதானே? என்றார் மகாவிஷ்ணு. ஆம். பூமிதேவி கொடுத்தவைதான். ஆகவே, தங்களது தவத்தைக் கணக்கிட்டுப் பார்த்ததில் உங்களைத் தாங்கிய இந்த பூமியைத் தாங்கள் பல வருட காலம் உம் தலையில் வைத்துத் தாங்க வேண்டும் என்றார் மகாவிஷ்ணு. அப்போதுதான், உத்தங்கருக்கு தனது கர்வம் விளங்கியது. தவசீலரானாலும் மற்றவர் உதவியின்றி அத்தகைய தவம் எவருக்கும் கைகூடி இருக்காது. தான் சாதித்ததாக எண்ணியது கர்வத்தால் என்பதை உணர்ந்து பகவானிடம் பிழை பொறுக்க வேண்டினார். பகவானும் மன்னித்து அவருக்கு முக்தி அளித்தார். |
|
|
|