|
புகழ்பெற்ற விதேக ராஜ்யத்தின் அரசரான ஜனகர் ஓர் ஆன்ம ஞானி. மிகப் புலமை வாய்ந்த அவர் அடிக்கடி தம் அரசவையில் தத்துவ விசாரங்களை நடத்தி, தர்க்கங்களையும் வாதங்களையும் ஊக்குவிப்பது வழக்கம். அதில் பண்டிதர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளித்து கவுரவிப்பார். ஒருமுறை ஜனகர் ஒரு யாகம் நடத்தினார். மிக விரிவாக நடத்தப்பட்ட அந்த யாகத்தில் பங்கு கொள்ள அண்டை நாடுகளிலிருந்தும் வேத விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். யாகத்தின் பகுதியாக ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. ஓராயிரம் பசுக்களும் அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்ட தங்கக் காசுகளும் அதில் வெற்றி பெறும் வேத விற்பன்னருக்குப் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சபையில் பெரும் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. திடீரென்று அவையோரை ஆச்சர்யத்திற்குள்ளாக்கும் விதமாக அவர்களுள் ஒரு ரிஷி தன் சீடரை அழைத்து, அப்பசுக்களைத் தம் ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு பணித்தார்.
அவ்வாறு பணித்தவர் ரிஷிகளுள் மிகவும் மதிப்பு வாய்ந்த யாக்ஞவல்கிய மகரிஷி. அவையோர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். போட்டியே ஆரம்பமாகவில்லை. அதற்குள் பரிசை எடுத்துச் செல்வதாவது என்று எதிர்த்தனர். ஆனால் மிக்க தன்னம்பிக்கையோடு முனிவர் அவையோரை வணங்கி பதிலளித்தார். இப்பசுக்களின் தேவை எனக்கிருப்பதால் நான் இவற்றை ஓட்டிச் செல்வதில் தவறில்லை என்றார். ஜனக மகாராஜா தலையிட்டு, யாகத்தின் தலைமை புரோகிதரான அஷ்வலாவிடம் போட்டியைத் துவக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அவையிலிருந்த வேத விற்பன்னர்கள் இறைவன், இயற்கை, ஆத்மா போன்றவற்றைப் பற்றிப் பல கேள்விகளை யாக்ஞவல்கியரிடம் கேட்டு அவரைச் சோதித்தனர். அவர்களுள் பெண் ஞானியான கார்கியும் ஒருவர். கேள்விகள் நுணுக்கமாகவும் சிக்கலாகவும் இருந்தன. யாக்ஞவல்கியர் அளித்த பதில்களோ சுருக்கமாகவும், துல்லியமாகவும், புத்திகூர்மையுடனும் விளங்கின. அவையில் இருந்தோருக்கு அப்போட்டி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
யாக்ஞவல்கியரின் பதில்களும், பொறுமையுடனும் இனிமையுடனும் அவர் பதிலளித்த பண்பும் சபையோரைக் கவர்ந்தன. பின் உத்தாலகர் என்ற ரிஷி, யாக்ஞவல்கியரிடம் வினா எழுப்ப எழுந்தார். அவர், நானும் என் குருவும் ஒரு கந்தர்வனைச் சந்திக்க நேர்ந்தபோது, அவன் எங்களிடம் ஒரு கேள்வி கேட்டான். உங்களையும் என்னையும் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இணைக்கும் சூத்திரம் (நூல்), எது என்று தெரியுமா? என்று கேட்டான். எங்களுக்குப் பதில் தெரியவில்லை. கந்தர்வன் இன்னொரு கேள்வியும் கேட்டான். இப்பிரபஞ்சத்தில் அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக விளங்கி அனைத்தையும் அடக்கியாளும் ஒருவர் உண்டு. அவர் யாரென்று அறிவீரா? அதற்கும் எங்களுக்குப் பதில் தெரியவில்லை. அதன்பின் கந்தர்வன் அவற்றுக்கான பதிலை எங்களுக்கு விளக்கிக் கூறினான். அதோடுகூட, இவ்விரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவரே சிறந்த ஞானி என்றும் அனைத்து உண்மைகளையும் அறிந்தவர் என்றும் திண்ணமாகக் கூறினான். இவ்விரண்டு கேள்விகளுக்கும் நீர் பதிலளிக்க முடியுமானால் நீர் ஞானி என்று நாங்கள் ஒப்புக் கொள்வோம். அந்த சூத்திரம் எது? அந்த அந்தர்யாமி யார்? என்ற இக்கேள்விகளுக்கு விடையளிக்காமல் நீர் பசுக்களை ஓட்டிச் செல்ல முயன்றால், கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்துவிட்டு அமர்ந்தார்.
இம்மாதிரியான கேள்விகளும் எச்சரிக்கைகளும் சாதாரண பண்டிதர்களைக் கதிகலங்க வைத்து விடும். ஆனால் யாக்ஞவல்கியரோ அமைதியாகவும் கம்பீரமாகவும் உத்தாலகரைப் பார்த்து, வாயு என்ற சூத்திரத்தால் உலகில் பொருட்கள் கோர்க்கப்படுகின்றன. உடலிலிருந்து வாயு பிரியும்போது உடலிலிருந்த பஞ்ச பூதங்களும் பிரிந்து போய் விடுகின்றன என்று பதிலளித்தார். உத்தாலகர் இந்தப் பதிலால் மகிழ்ந்து ஆச்சர்யம் அடைந்தார். யாக்ஞவல்கியர் இரண்டாம் கேள்விக்கு அளித்த பதிலை அறியும் முன் வாயு அல்லது பிராணன் எவ்வாறு உலகைக் கோர்த்துப் பிடித்துள்ளது என்று பார்ப்போம். நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாமரம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அது ஒவ்வோர் ஆண்டும் சுவையான பழங்களை நமக்களிக்கிறது. வசந்த காலத்தில் அம்மரத்தைப் பார்ப்பதே ஓர் அழகு. தேனீக்கள் வட்டமிட பூத்துக் குலுங்கும் அம்மரக்கிளைகள் சின்னஞ்சிறு மாவடுகளுடன் நிறைந்த பாரத்துடன் வளைந்து தொங்குவதைக் காணலாம். நிழல் தரும் கரங்களைப் பரப்பி இளங்காற்றில் அவை அசைந்தாடும் அழகே அழகு. ஆனால் நம்மைப் பொருத்தவரை அதன் ருசியான பழங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. அந்த மரத்தின் ஒவ்வொரு பகுதியும் அப்பழங்களைப் போலவே அதன் வளர்ச்சிக்கும் அமைப்பிற்கும் இன்றியமையாத மதிப்பு மிக்கவை என்பதை நாம் சவுகர்யமாக மறந்து விடப் பழகி விட்டோம்.
உயிரினங்களில் பல அம்மாமரத்தின் பழங்களை உண்டு பசியாறுகின்றன. அம்மரத்தின் இலைகளோ உயிரினங்கள் அனைத்திற்காகவும் சுவாசிக்கின்றன. தேனீக்களும் பறவைகளும் மரத்தின்மேல் ஊரும் பலவித பூச்சிகளும் அம்மரத்தின் பலவித உபயோகங்களுக்குச் சாட்சி கூறும். அம்மரத்தின் எந்தப் பகுதியையாவது அதன் அடிப்படை அம்சத்திலிருந்து பிரித்து விலக்கி விட இயலுமா? இயலாது. ஏனெனில், அதன் பழங்களில், பூக்களில், இலைகளில், அடி மரத்தில், அதன் கிளைகளில் என்று அதன் ஒவ்வொரு பகுதியிலும் அம்மரத்தின் உண்மை இயல்பு ஊடுருவி இருந்து அதனை வழி நடத்துகிறது. தன் தனித்தன்மையை ஒவ்வொரு சிறு உறுப்பிலும் நிரப்பி வெளிப்படுத்தி வளருகிறது. இத்தன்மையே இயற்கையின் ஒவ்வொரு படைப்பிற்கும் மனித இனத்திற்கும் சேர்த்து பொருந்தும். மனதும் சித்தமும் அறிவும் ஐந்து ஞானேந்திரியங்களும் ஐந்து கர்மேந்திரியங்களும் நாம் பெற்றுள்ளோம். ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்தாலும் உடலின் ஒட்டு மொத்த நோக்கம் அந்த ஜீவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுவதே ஆகும். இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கும் ஜீவன் அந்த மகிழ்ச்சிக்காகப் பாடுபடும் அதன் வெவ்வேறு உறுப்புகளில் இருந்து வேறு பட்டவனா? இல்லை அல்லவா? அதனால் செய்பவனும் அனுபவிப்பவனும் ஒருவனே என்பது உணரப்படுகிறது.
நாம் கண்களைத் திறந்து உலகைப் பார்க்கையில் அதன் பரந்து விரிந்த பலதரப்பட்ட இயற்கை அழகை வியந்து ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. எல்லையற்ற நீலநிற வானம், அளக்க இயலாத ஆழம் கொண்ட கடல், பாதையின்றி அடர்ந்த கறுத்த காடுகள் போன்றவை அழகைப் பருகத்துடிக்கும் நம் மானுடக் கண்களால் காணப்படுகின்றன. ஆனால் வெறும் கண்களால் அவற்றை ரசிக்க இயலுமா? நிறங்களையும் வடிவங்களையும் ரசிப்பதற்கு நம் மூளையும் அதன் சிக்கலான அமைப்பும் அல்லவா காரணம்? மூளை என்னும் ஒப்புயர்வற்ற கருவி, பொருட்களைக் கண்டறிந்து, பகுத்தறிந்து தேவையானவற்றையும் தேவையற்றவற்றையும் தேர்ந்தறிந்து பயன்படுத்தும் போதுதான் பார்க்கும் செயலான கண்ணில் வேலை பூர்த்தியாகிறது. ஆகவே மூளையில் பின்னே காண்பவர் ஒருவர் இருக்கிறார். அவேர ஆத்மன். மூளையில் பின்னே இருக்கிறாரே தவிர அவரே மூளை அல்ல. இந்த அமைப்பு கேட்கும் காதிற்கும் பொருந்தும். உலகின் ஓசைகள் நம்முள் அதிர்கின்றன. குழந்தைகளின் சிரிப்பொலி, அன்பான வார்த்தைகள், இடியின் அதிர்வோசை போன்றவை நம் இதயத்தைக் கவர்கின்றன. இன்னிசையின் இனிய ராகங்கள் நம் இதயத்தின் உள்ளுறைகளைத் துளைத்து உலகின் ஆரவாரத்திற்கு அப்பால் எங்கோ நம்மை இழுத்துச் செல்கின்றன. கேட்கும் வெறும் காதுகள் இவற்றை உணர்வதில்லை. கேட்பதற்கான வெளி உறுப்பு, ஓசைகளைச் சேகரித்து மூளையின் அதற்கான பகுதிக்கு எடுத்து அனுப்புகிறது.
யாக்ஞவல்கியர் கூறுகிறார்: அந்தர்யாமியாக உள்ளிருப்பவர் பார்க்கிறார். ஆனால் கண்ணிற்கு வெளிப்படாமல் உள்ளே ஒளிந்திருக்கிறார். அந்த அந்தர் யாமியின் உருவம் கண்ணேயானாலும் அக்கண் அவரை அறியாது. அவன் காதின் உருவைப் பெற்றிருந்தாலும் அக்காதும் அவனை உணராது. இருக்கிறோம் என்ற அந்த உணர்வே அவன். அவன்தான் உண்மையில் பார்ப்பதும், கேட்பதும் மற்றும் அறிவின் அனைத்து உணர்வுகளும். தன்னுடைய தெளிவான வாதத்தால் ஐம்புலன்களின் அனைத்து உணர்ச்சிகளையும் செயல்களையும் விளக்கினார் யாக்ஞவல்கிய மகரிஷி. மனிதனையும் விலங்கையும் வேறுபடுத்துவது மனிதனிடம் அமைந்துள்ள உயர்வான கருவியாகிய ஆறாவது அறிவு எனப்படும் சிந்திக்கும் திறனேயாகும். இவ்வறிவும் நம்முள்ளே உறைந்துள்ள அந்தர்யாமியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் நாம் அதனை அறிவதில்லை. அந்த அந்தர்யாமியே நான் என்றும் ஆத்மா என்றும் உபநிஷத்துக்களால் உணர்த்தப்படுகிறது. இதுவே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களிலும், நிறைந்திருந்து இயற்கையை ஆட்டுவிக்கிறது. ஆயினும் அவ்வியற்கையாலும் அது பாதிக்கப்படுவதில்லை.
மனிதனின் மையப்பொருளான நான் என்னும் ஆத்மாவே உலகிற்கு மையப் பொருளாக அமைந்துள்ளது. பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையும் செயல்பாடும் கொண்டவை. அவற்றின் தொகுப்பும் பிரிவுமே நாம் காணும் இவ்வுலகின் பல்வேறுப்பட்ட வடிவமைப்பு கொண்ட பொருட்களுக்கு மூல காரணமாகும். இதையே யாக்ஞவல்கிய மகிரிஷி தன் சுருக்கமான புலமை மிக்க சொற்களால் அழகாக விவரித்தார். ஒவ்வொரு வடிவும் அமைப்பும் கண்ணுக்குப் புலப்படாத எங்கும் நிறைந்துள்ள அந்த அந்தர்யாமியால் ஆனது, அதனாலேயே ஆளப்படுகிறது. அந்த அந்தர்யாமியே சூத்திரமாக, கயிறாக அனைத்துள்ளும் இருந்து இணைக்கிறது. பூக்களை மாலையாக இணைக்கும் நார் போல, வெளி உலகையும் ஆன்மிக உலகையும் ஒன்றிணைத்து அவற்றை ஒரே உடலின் உறுப்புகளாக்குவது அந்த அந்தர்யாமியே என்று எடுத்துரைத்தார். உத்தாலகரும் மற்றுமுள்ள அவையோரும் யாக்ஞவல்கியரின் அப்பழுக்கற்ற ஞானம் ஒளிரும் வாதத்தைச் செவிமடுத்து மகிழ்ந்தனர். அவரே உண்மையை உணர்ந்தவர் என்றும் வெற்றி பெற்றவர் என்றும் அறிவித்து, பரிசுப் பசுக்களை ஓட்டிச் செல்லுமாறு உற்சாகமாக வேண்டிக் கொண்டனர். யாக்ஞவல்கியர் உபதேசித்த அந்த மகத்தான உண்மையே ஆத்மா என்றும் பிரம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. |
|
|
|