|
செல்வம் மற்றும் உயர்ந்த பதவியில் உள்ளவர்களை சந்திக்கவும், அவர்களிடம் நட்பு பாராட்டவும், அவர்களது தயவுக்காகவும் ஏங்குவர், சிலர். இத்தன்மையை கடவுளிடம் காட்டினால், இறைவன் நம்மை தேடி வந்து அருள்வார் என்பதற்கு இக்கதையே சான்று. மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரை குளத்தில் புனித நீராடிய பக்தர் ஒருவர், தாயே மீனாட்சி... குலதெய்வமான நீயே எங்களை கைவிட்டால், நாங்கள் எங்கு போவோம்... பஞ்சத்தின் காரணமாக, சொந்த ஊரைவிட்டு வெளியேறிய எங்களை, இன்னும் எங்கெல்லாம் அனுப்பப் போகிறாய்... எங்கு போனாலும், நீயே எனக்கு துணை... என்று அம்பிகையிடம் முறையிட்டபடியே குளத்தில் மூழ்கினார். அப்போது, பக்தரின் கையில், சிறு கல் ஒன்று அகப்பட்டது. அதை எடுத்தவர், தடுக்கி விழுந்தவனுக்கு ஊன்றுகோல் கிடைத்தது போல, என் கையில் கிடைத்திருக்கும் இக்கல்லையே, நீயாக எண்ணி என்னுடன் எடுத்துச் செல்கிறேன்... என்றபடி, அக்கல்லை பயபக்தியுடன் எடுத்துச் சென்றார்.
பக்தர் மற்றும் அவரை சார்ந்தோரின் பயணம், அங்கிருந்து கேரளாவை நோக்கி தொடர்ந்தது. தோப்புகளும், குளங்களும் நிறைந்த பச்சைப் பசேலென்ற பூமி, அவர்களை வரவேற்றது. மீனாட்சி அம்மனை வணங்கி அவ்விடத்திலேயே தங்கி, தங்கள் குல தொழிலான வைர வியாபாரத்தை துவக்கினர். வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் போதெல்லாம், மதுரையிலிருந்து தான் எடுத்து வந்திருந்த கல்லை, மீனாட்சியாக கருதி, சுமந்து செல்லும் பக்தர், அப்படியே மதுரைக்கும் சென்று அம்மனை தரிசித்து வந்தார். காலங்கள் கடந்தன; வியாபாரம் பெருகியது. முதுமையால் பக்தரால் வெளியூர் பயணம் செல்லவோ, மீனாட்சியை தரிசிக்கவோ முடியவில்லை. ஆனாலும், ஒருநாள், மீனாட்சியம்மை கல்லோடு, ஒரு பனை ஓலைக் குடையையும் தூக்கிக் கொண்டு, வெளியூருக்கு பயணித்தார், பக்தர். வழியில், குளக்கரையில், தன் மூட்டை முடிச்சுகளையும், அவற்றின் மீது, பனை ஓலை குடையையும் வைத்தார். அங்கே, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரு சிறுவர்களை கூப்பிட்டு, தன் பொருட்களை பார்த்துக் கொள்ள சொல்லி, குளத்தில் இறங்கி நீராடியவர், தாயே மீனாட்சி... உன்னை தேடி வரும் இந்த அடியவனுக்கு, உடல் பலத்தை குறைத்து விட்டாயே... நீயாவது என்னை தேடி வரக்கூடாதா... என்றபடியே நீராடி, கரையேறினார்.
குடையையும், பயண மூட்டையையும் தூக்க முயன்றார்; முடியவில்லை. அதனால், குடையின் அடியில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்தார். மீனாட்சி கல் மட்டும் மலை போல் கனத்து, நகர மறுத்தது. மனம் பதறிய பக்தர், தாயே... வேதங்கள் உட்பட முனிவர்களும், தேவர்களும் உன்னை தேடி அலையும் போது, என்னை நீ தேடி வரக்கூடாதா என்றதால், என்னை சோதிக்கிறாயா... என, புலம்பியவர், காரணத்தை அறிய, பிரபல ஜோதிடரிடம் சென்று, நடந்ததையெல்லாம் சொன்னார். அவர் சோழிகளை உருட்டிப் பார்த்து, ஐயா... உங்களுடைய தூய்மையான பக்திக்காக, அன்னை மீனாட்சியே உங்களை தேடி வந்து விட்டாள். நீங்கள் வைத்திருக்கும் கல்லிலும், குடையிலும் எழுந்தருளியுள்ளாள். இனி, நீங்கள் மதுரை செல்ல வேண்டாம். இங்கேயே கோவில் கட்டி, அவளை வழிபடுங்கள். இங்குள்ள மற்றவர்களும், அவளை தொழுது, அருள் பெறட்டும்... என்றார். அப்படி கட்டப்பட்ட கோவில் தான், கேரளாவில் உள்ள மீன்குளத்தியம்மன் கோவில். மீன்கள் துள்ளி விளையாடும் குளக்கரையில் எழுந்தருளியிருப்பதால், இப்பெயர் அமைந்தது. அடியாரின் துயர் தீர்க்க, அன்னையே எழுந்தருளிய அற்புதமான திருத்தலம் இது. பாலக்காட்டிலிருந்து, 20 கி.மீ., தொலைவில் பல்லசேனா என்ற இடத்தில், இக்கோவில் உள்ளது. தேடி வந்து அருள் செய்த அன்னை, நமக்கும் அருள் புரிய வேண்டுவோம்!
|
|
|
|