|
சூரியன் பகல், இரவை தினமும் உருவாக்கி விடுவான். ஒருநாள் கூட இந்தக் கடமை தவறாது. அவனது கடமையுணர்வைக் கண்ட அசுரர்கள் பொறாமை கொண்டனர். அவன் செல்லும் வழியில் மாயாவி போல தோன்றி அவ்வப்போது தாக்கினர். வருந்திய சூரியன், வைகுண்டம் சென்று திருமாலைச் சரணடைந்தான். விஷயம் அறிந்த மகாவிஷ்ணு, “சூரியதேவா! கவலை வேண்டாம்! அசுரர்களின் கொட்டத்தை அடக்குவது என் பொறுப்பு” என்று சொல்லி சூரிய நாராயணராக வடிவெடுத்தார். குங்கும வர்ணத்தில் கீழ் வானில் சூரிய நாராயணர் பிரகாசிக்கத் தொடங்கினார். சூரிய நாராயணரின் பேரழகைக் கண்டு மயங்கிய மகாலட்சுமி, செந்தாமரை மலராக உருவெடுத்து பூலோகம் எங்கும் மலர்ந்தாள். சூரியநாராயணரை, சூரியன் என நினைத்த அசுரர்கள் அவரிடம் வாலைக் காட்டினர். அவர் சக்கராயுதத்தால் அவர்களை வதம் செய்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் லட்சுமி தாயாருக்கு செந்தாமரை மலர் முக்கியத்துவம் பெற்றது. செல்வவளமும், ஆரோக்கியமும் பெற செந்தாமரை மலரால் மகாலட்சுமியை அர்ச்சிக்கும் வழக்கம் ஏற்பட்டது. திருமகளான அவள் செந்தாமரை மலரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். |
|
|
|