|
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பர். அதன்படி, தன்னையே நம்பிய பெண்ணின் பக்திக்கு இரங்கி, அவளைப் பிரிந்து சென்ற கணவனை, அவளிடமே கொண்டு வந்து சேர்த்தாள், அம்பிகை. அவள் அருளாடலைச் சொல்லும் வரலாறு இது:
சேலம் எனும் ஊரில், வேலன் - செல்லாத்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். கருத்தொற்றுமையும், இறைபக்தியும் நிரம்பிய இவர்கள், அம்பிகை பக்தர்களாக திகழ்ந்தனர். உழைத்துப் பிழைத்தாலும், என்னை விட தகுதியும், திறமையும், உழைப்பும் கொண்டவர்கள் எவ்வளவோ பேர் இருக்க, அவர்களுக்கெல்லாம் கிடைக்காத நல்வாழ்வை எனக்கு தந்த தெய்வமே... உன்னருளால் இன்று எனக்கு இது கிடைத்தது... என்பான் வேலன். அவன் மனைவியோ, நொடிக்கொரு முறை மாரியம்மனின் பெயரை உச்சரிப்பாள். ஒருநாள், வியாபார நிமித்தமாக அருகிலிருக்கும் சோலைப்புதூர் என்ற ஊருக்கு சென்ற வேலன், அங்கே, ஒரு விலைமாதுவை சந்தித்தான். அப்புறமென்ன... அதுவரை அவனிடம் இருந்த நற்பண்புகள் எல்லாம் மாறி, அவளே கதியென, அவ்வூரிலேயே தங்கத் துவங்கினான். மனம் வெதும்பிய செல்லாத்தா, தாயே மாரியாத்தா... என் கணவரை எப்படியாவது என்னிடம் சேர்த்து வை... என வேண்டி, தினமும் மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சிணம் செய்து வந்தாள். பெண்கள் கண் கலங்கினால், அந்த வீடு விருத்தியடையாது என்பது சான்றோர் வாக்கு. அதற்கேற்ப, வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, பொருளை எல்லாம் இழந்து நின்றான், வேலன். விவரமறிந்த விலைமாது, அவனை விரட்டியடித்தாள்.
வேலனுக்கு தன் தவறு புரிந்தது. ஆனாலும், வீடு திரும்ப தயங்கி, உயிரைத் துறக்க முடிவு செய்தான். அதன்படி விஷத்தை அருந்தப் போகும் நேரத்தில், மகனே... தற்கொலை செய்வது கோழைத்தனமல்லவா... உன்னையே நம்பி இருக்கும் உன் மனைவியை நினைத்துப் பார்த்தாயா... நீ, வீடு திரும்ப வேண்டுமென தினமும் அங்கப்பிரதட்சிணம் செய்யும் அவள் தவமும், விரதமும் வீணாகலாமா... சங்கடப்படாமல் வீடு திரும்பு; அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள்... என, அசிரீரி ஒலித்தது. கையிலிருந்த விஷத்தை, கீழே எறிந்து, அரை மனதோடு வீடு திரும்பினான் வேலன். வீட்டில் வழிபாடு செய்து கொண்டிருந்த செல்லாத்தா, கணவனைப் பார்த்ததும் ஆச்சரியத்தின் உச்சிக்கே போனாள். காரணம், நைந்து போன நூலாக காட்சியளித்த கணவனின் பின், ஒளி வீசும் முகத்துடன், அலங்கார சொரூபிணியாக காட்சியளித்தாள், அம்பிகை. செல்லாத்தா... இதோ, உன் கணவனை உன்னிடமே சேர்த்து விட்டேன். இனி, அவன் தவறு செய்ய மாட்டான்; ஏற்றுக் கொள்... என்றாள், அம்பிகை. யார் நீ... என, ஐயத்துடன் கேட்டாள், செல்லாத்தா. நீ தினமும் வழிபடும் மாரியம்மன்... என்றவள், அடுத்த நொடி மறைந்தாள். மெய் சிலிர்க்க, என் வாட்டம் தீர்க்க, வாசல் தேடி வந்த தாயே... என்று கைகூப்பி தொழுதாள், செல்லாத்தா. தீய வழியில் சென்றவனை, சோதனையின் மூலம் திருத்தி, பிரிந்த தம்பதியை சேர்த்து வைத்து, திருவிளையாடல் நிகழ்த்திய அந்த அன்னை தான் சேலத்தில், கோட்டை மாரியம்மன் எனும் திருநாமத்தோடு எழுந்தருளி, அருள் பாலிப்பவள். நாமும், நமக்குள் எந்த விதமான பிரிவினையும் இல்லாமல், தூய்மையான அன்போடு இருக்க, அன்னையின் அருளை வேண்டுவோம்! |
|
|
|