|
வேத ஆசிரியர் ஒருவருக்கு சாளக்கிராம கல் ஒன்று கிடைத்தது. திராட்சை பழம் அளவே இருந்த இந்தக் கல்லை சந்தான கோபாலனாக நினைத்து வழிபட்டு வந்தார் ஆசிரியர். சந்தான கோபாலனும் அவன் வேத மந்திரம் முழங்கும் அழகு கண்டு ரசிப்பான். அந்த ஆசிரியருக்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு. பூஜை முடிந்ததும் அந்தக் கல்லை வெற்றிலைப் பெட்டிகுள்ளேயே வைத்து விடுவார். ஒருநாள் தவறுதலாக பாக்கு என நினைத்து, அந்தக் கல்லை வாயில் போட்டு வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பணக்காரர் வந்தார். வெற்றிலை பெட்டியில் சாளக்கிராமம் இல்லாததைக் கண்ட அவர், “நீங்கள் கல்லை வாயில் போட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன், ஒரு பக்கம் உதைப்பாக தெரிகிறதே!” என்றார். பதறிப் போன ஆசிரியர் கல்லை வெளியே எடுத்து விட்டார். “ஐயோ! இந்த சந்தான கோபாலனுக்கு தினமும் பாலும், பழமும், பஞ்சாமிர்தமுமாக அபிஷேகம் செய்வேனே! இன்று என் வாயில் போட்டு எச்சில் ஆற்றில் நீராடி விட்டேனே,” என வருத்தப்பட்டார். கண்ணீர் முட்டியது.
அந்த சாளக்கிராமத்தை தன் வீட்டுக்கு கொண்டு போய் பூஜை செய்ய வேண்டும் என பணக்காரருக்கு நீண்ட நாளாக ஆசை இருந்தது. அவர் ஆசிரியரிடம்,“நீங்கள் இப்படித்தான்! உங்களால் இதையெல்லாம் பாதுகாக்க முடியாது. ஒரு தெய்வ பிம்பத்தை போயும் போயும் வெற்றிலை பெட்டியிலா வைப்பீர்கள். என்னிடம் கொடுங்கள். என் வீட்டில் தங்கப்பேழை இருக்கிறது. அதில் வைத்து பாதுகாக்கிறேன். தங்கமான இந்த கோபாலன், தங்கப்பெட்டியில் தானே இருக்க வேண்டும்,” என்று பக்குவமாக எடுத்துச் சொன்னார். ஆசிரியருக்கும் மகிழ்ச்சி! ‘ஆஹா...என் கோபாலன் தங்கப்பெட்டியில் குடியிருக்கப் போகிறானா! அவனுக்கு சரியான இடம் அது தான். சரி, அங்கேயே இருக்கட்டும்,” என பணக்காரரிடம் சாளக்கிராமத்தை கொடுத்து விட்டார். மகிழ்ந்து போன பணக்காரர் அதை தங்கப்பெட்டியில் வைத்தார்.
தினமும் எடுத்து அதற்கு வெண்ணெய் என்ன, பலகாரங்கள் என்ன, இனிப்பு வகைகள் என்ன, பால் என்ன, பழ வகைகள் என்ன... இப்படி தினமும் நைவேத்யம் செய்தார். ஊராரைஎல்லாம் அழைத்து சாளக்கிராமத்தைக் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? ஒருநாள் தங்கப்பேழைக்குள் இருந்து அழுகை சத்தம் கேட்டது. பதறிப்போன பணக்காரர் பேழையைத் திறந்தார். உள்ளே நாவல்பழம் அளவில் இருந்து சாளக்கிராமத்தில் கோபாலன் எழுந்தருளி பேசினான். “ஐயா! எனக்கு தங்கப் பேழை வேண்டாம். தினமும் சாப்பிடுவது மட்டும் என் வேலை அல்ல. வேத மந்திரங்களை நான் கேட்க வேண்டும். அது அந்த ஆசிரியரின் வீட்டில் தினமும் நடந்தது. என்னை திரும்பவும் அங்கேயே கொண்டு போய் விட்டு விடுங்கள்,” என்றான். “அவர் உன்னை வாயில் போட்டு எச்சிலாக்கி விட்டாரே கண்ணா!” என்று பணக்காரர் வருத்தத்துடன் சொல்ல, “எனக்கு பாலாறை விட, வேதம் சொல்லும் எச்சில் வாய் ஆறே உயர்ந்தது. அதனுள் கிடப்பதை நான் பெருமையாகவே கருதுகிறேன். யமுனைக்கரையில் வசித்த கோபிகைகள் தினமும் வாய் கொப்பளிக்கும் போது ‘கிருஷ்ணா, முகுந்தா, மாதவா’ என்றெல்லாம் பகவானின் திருநாமத்தை உச்சரித்து உமிழ்வார்கள். அதனால் தான் அது புண்ணிய நதி ஆயிற்று. அது போலத்தான் இதுவும்,” என்றான். பணக்காரர் சாளக்கிராமத்தை மீண்டும் வேத ஆசிரியரிடமே ஒப்படைத்து விட்டார். |
|
|
|