|
யுகங்கள் நான்கு. கிருத யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகியன அவை. இதில் மூன்றாம் யுகமான துவாபரா யுகத்தில் சூரன் என்ற மன்னன் மதுராவை ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு உக்கிரசேனன், தேவகர் என்னும் இரு தம்பிகள் இருந்தனர். உக்கிரசேனனுக்கு கம்சன் என்னும் மகனும், தேவகருக்கு தேவகி என்னும் மகளும் இருந்தனர். அதாவது, கம்சனுக்கு சித்தப்பா மகள். கம்சன் அசுர குணம் கொண்டவன். தேவகியை யது வம்சத்தைச் சேர்ந்த சூரசேனனின் மகன் வசுதேவருக்கு மணம் செய்து வைத்தனர். இவர் மதுரா அருகிலுள்ள சூரசேனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். திருமணம் முடிந்ததும் மணமக்கள் தேரில் சூரசேனத்திற்கு புறப்பட்டனர். தங்கையை கணவன் வீட்டில் விட்டு வர கம்சன் உடன் சென்றான். அவனே தேரையும் ஓட்டினான். செல்லும் வழியில் வானில் அசரீரி ஒலித்தது, “கம்சா! உன் தங்கை தேவகியின் எட்டாவது பிள்ளை உன் பரம எதிரி. அவனால் நீ கொல்லப்படுவாய்” என்றது. திடுக்கிட்ட கம்சன், “தேவகி.... நீயா என் எதிரியைப் பெற்றெடுக்கப் போகும் தாய்! உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சொல்லி வாளை எடுத்தான். வசுதேவர் அவனைத் தடுத்து, “கம்சா! இவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தை தானே உன் எதிரி. குழந்தை பிறந்ததும் உன்னிடமே ஒப்படைக்கிறேன்,” என்று சத்தியம் செய்தார்.
நிம்மதியடைந்த கம்சன், அவர்களை சிறையில் அடைத்து விட்டான் வாக்களித்தபடி வசுதேவர் குழந்தைகளை கம்சனிடம் ஒப்படைத்தார். அவனும் ஆறு குழந்தைகளை கருணையின்றி கொன்றான். தேவகியின் கருவில் ஆதிசேஷனின் அம்சமான ஏழாவது குழந்தை வளர்ந்தது. தான் அவதரிக்கும் காலம் நெருங்குவதை உணர்ந்த விஷ்ணு, தன் மாயா சக்தியால் அந்தக் கருவை, ஆயர்பாடியில் வசித்த மக்களின் தலைவரான நந்தகோபர் மனைவி ரோகிணியின் கர்ப்பத்தில் சேர்த்தார். இந்தக் குழந்தையே பலராமராக அவதரித்தது. இதையறிந்த கம்சன், தேவகிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கருதி நிம்மதியடைந்தான். அதன் பின் எட்டாவது கர்ப்பத்தில் பகவான் விஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்தார். அதே சமயத்தில் கோகுலத்தில் நந்தகோபரின் இன்னொரு மனைவியான யசோதைக்கு விஷ்ணுவின் மாயாசக்தியான பெண் குழந்தை பிறந்தது. இவளே துர்க்கை எனப்பட்டாள் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி நன்னாளில் தேவகியின் கர்ப்பத்தில் கிருஷ்ணர் அவதரித்தார். அப்போது வசுதேவரையும், தேவகியையும் பிணைத்திருந்த இரும்புச் சங்கிலிகள் தானாகவே கழன்று விழுந்தன.
தானே பரம்பொருள் என்பதை உணர்த்தும் விதமாக கிருஷ்ணர் விஸ்வரூபத்தில் மகாவிஷ்ணுவாக அவர்களுக்கு காட்சியளித்தார். அப்போது விஷ்ணு,“ முந்தைய யுகங்களில் நீங்கள் இருவரும் 12 ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து என்னைப் பிள்ளையாகப் பெறும் பாக்கியம் பெற்றீர்கள். அப்போது சுதபா, பிருச்னி என்னும் பெயரிலும், அதன் பின் கஷ்யபர், அதிதி என்னும் பெயரிலும் வாழ்ந்தீர்கள். தற்போது வசுதேவர், தேவகியான உங்களுக்கு பிள்ளையாக நான் பிறந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். அதன் பின் சாதாரண குழந்தையாக உருமாறிய கிருஷ்ணர், ஆயர்பாடியில் வசிக்கும் நந்தகோபரிடம் தன்னைச் சேர்க்கவும், அவரது பெண் குழந்தையை (துர்க்கை) கம்சனிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். விஷ்ணுவின் அருளால் வசுதேவர் யமுனை ஆற்றைக் கடந்து குழந்தைகளை இடம் மாற்றினார். தேவகிக்கு எட்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக கருதிய கம்சன் அதைக் கொல்ல முயன்றான். அக்குழந்தை காளியாக வடிவெடுத்து, “மூடனே... கம்சா! உன் எதிரி எப்போதோ பிறந்து இடம் மாறி விட்டான்” என்று சொல்லி விண்ணில் மறைந்தாள். இதன் பிறகு கிருஷ்ணர் நந்தகோபர் வீட்டிலேயே வளர்ந்தார். இதையே ஆண்டாள் ‘ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’ என்று திருப்பாவையில் பாடுகிறாள். |
|
|
|