|
கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தையான நந்தகோபர், ஒருநாள் காலை 4.30 மணி வாக்கில் யமுனையாற்றில் நீராடச் சென்றார். பொழுது புலரும் முன்பே நீராட வந்த நந்தகோபரை கண்டிக்கும் விதத்தில், தண்ணீருக்கு அதிபதியான வருணனின் துõதன் ஒருவன், அவரை வருண லோகத்திற்கு இழுத்துச் சென்றான். வெகுநேரமாகியும் நந்தகோபர் வீடு திரும்பாததால் யசோதை கவலைப்பட்டாள். விஷயம் அறிந்த கிருஷ்ணர் தன் யோகசக்தி மூலம் நடந்ததை அறிந்தார். “அம்மா! வருந்தாதீர்கள். இதோ நொடியில் தந்தையை அழைத்து வருகிறேன்” என்று உறுதியளித்து புறப்பட்டார். பெருகியோடும் யமுனைக்குள் பாய்ந்த கிருஷ்ணர் வருண மாளிகை நோக்கிச் சென்றார். கிருஷ்ணர் தன் மாளிகைக்கு வந்தது கண்ட வருணன் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டான். “பகவானே! தங்களின் பாதத்தில் சரணடைந்தவர்கள் அனைவரும் பிறவிக்கடலில் இருந்தே விடுதலை பெறுகின்றனர். இன்று உங்களைத் தரிசிக்கும் பேறு வாய்க்கப் பெற்றேன். தங்களின் தந்தையார் என்பதை அறியாமல் தவறு இழைத்த என் துõதரை மன்னித்து அருளுங்கள்” என்று வேண்டினான். வருணனின் பணிவு கண்ட கிருஷ்ணருக்கு தண்டிக்கும் எண்ணம் மறைந்தது. அவனுக்கு ஆசியளித்து தந்தையுடன் கிளம்பினார். |
|
|
|