|
மிதிலையில் சுருததேவர் என்னும் கிருஷ்ண பக்தர் இருந்தார். அவரது பக்தி கண்டு மகிழ்ந்த கிருஷ்ணர், நேரில் வந்து ஆசிர்வதிக்க விரும்பி தேரில் புறப்பட்டார். இதையறிந்த மிதிலை மன்னன் பகுலாச்வன் அமைச்சர்கள் புடைசூழ ஓடி வந்தான். பூரண கும்பத்தைக் கையில் ஏந்தியபடி, “கிருஷ்ண பிரபுவே! தங்களை தரிசிக்க நாங்கள் என்ன புண்ணியம் செய்தோம். தேடி வந்து அருள்புரியும் கருணாமூர்த்தியே! எங்கள் அரண்மனைக்கு விருந்தினராக எழுந்தருள வேண்டும்” என்று வேண்டினான். சுருததேவரும் கிருஷ்ணரைத் தரிசிக்கும் ஆவலில் கூட்டத்தில் நின்றார். ஆனந்தக் கண்ணீர் பெருக, “ பகவானே! எளிய பக்தரான என் இல்லத்திற்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும்” என்று வேண்டினார். இருவரது அன்பையும் ஏற்றுக் கொண்ட கிருஷ்ணர், இருவரது வீட்டுக்கும் வருவதாக வாக்களித்தார். தன் மாயாசக்தியால் மன்னருடன் ஒரு கிருஷ்ணரும், பக்தருடன் ஒரு கிருஷ்ணருமாக அங்கிருந்து புறப்பட்டனர். அரண்மனையில் கிருஷ்ணருக்கு ராஜ உபசாரம் அளிக்கப்பட்டது. அறுசுவை அன்னம் பரிமாறப்பட்டது. சுருததேவரோ எளிய முறையில் கிருஷ்ணரை உபசரித்தார். பருக தண்ணீரும், பாலும் கொடுத்தார். எத்தனை பேர் என்ன கோரிக்கை வைத்தாலும் சரி...அத்தனை பேர் வீட்டுக்கும் வருவான் கண்ணன். |
|
|
|