|
மானவேடன் என்ற அரசன் குருவாயூர் வந்தான். அங்கே குருவாயூரப்பனான உன்னி கிருஷ்ணனை நேரில் கண்டவரும், அவனுடன் நினைத்த நேரத்தில் மிக சாதாரணமாக பேசுபவருமான வில்வமங்கலம் சுவாமியை தரிசித்தான். அவரிடம், “நீங்கள் உன்னி கிருஷ்ணனைக் கண்டது போல நானும் தரிசிக்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்,” என்றான். “ஏனப்பா! அதெல்லாம் நடக்கிற காரியமா! பெரிய பெரிய முனிவர்களெல்லாம் அவரது கடைக்கண் பார்வையாவது கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் தவம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு கிடைக்காத தரிசனம் உனக்கு எப்படி திடீரென கிடைக்கும்? அதெல்லாம் முடியாத காரியம்,” என்றார். மானவேடன் அழ ஆரம்பித்து விட்டான். உன்னி கிருஷ்ணனை பார்த்தே ஆக வேண்டும்,” என அடம் பிடித்தான். “சரி...நீ இங்கேயே இரு. இன்றிரவில் உன்னி கிருஷ்ணனிடம் கேட்டுச் சொல்கிறேன். அவர் சம்மதித்தால் நீ பார்க்கலாம்,” என்றார் வில்வமங்கலம் சுவாமி.
அன்றிரவில் உன்னி கிருஷ்ணனிடம் அதுபற்றி கேட்டார். மானவேடனுக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது. “நாளை அதிகாலை மகிழ மரத்தடியில் விளையாடிக் கொண்டிருப்பேன். அங்கே வந்து என்னை பார்க்கலாம்,” என சொல்லி விட்டார் உன்னி. மறுநாள் சொன்னது போலவே தலையில் மயில் இறகு, காலில் கொலுசு, இடுப்பில் ஒட்டியாணம் என்ற அணிகலன்கள் அணிந்து சின்னக்கண்ணன் விளையாடிக் கொண்டிருந்தார். மானவேடன் அவரைக் கண் குளிரக் கண்டான். உணர்ச்சி வேகத்தில் அவரை துõக்கிக் கொஞ்ச ஓடினான். கண்ணன் தடுத்து விட்டார். “மன்னரே! வில்வமங்கலம் என்னைப் பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி கேட்டார், கொடுத்தேன். என்னைத் துõக்கி விளையாட அனுமதியில்லை,” என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார். மானவேடன் பரவசத்தில் நின்ற வேளையில் அவனது கையில் ஒரு மயில் இறகு இருந்தது. அது கண்ணன் தனக்கு கொடுத்தது என்பதை உணர்ந்த அவன் ஒரு ரத்தின கிரீடத்தில் பதித்து பூஜித்து வந்தான். மேலும் கிருஷ்ணனின் புகழ்பாடும் ‘கிருஷ்ண கீதி’ என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினான். இந்நிகழ்வு நடந்தது ஒரு ஐப்பசி மாதத்தின் கடைசிநாள் என்பதால், அதே நாளில் இந்த நாடக நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. கிருஷ்ணனாக நடிப்பவர் மயிலிறகு பொருத்திய ரத்தின கிரீடம் தரித்திருப்பார். |
|
|
|