|
திருமாலே வைகுண்டத்தில் இருந்து கிருஷ்ணனாக அவதாரம் எடுத்து வந்தார். அந்த வைகுண்டத்தில் பொறாமை என்ற குணமே கிடையாது. செடி, கொடிகள் கூட ஒன்றைப் பார்த்து ஒன்று பொறாமைப்படாதாம். ஒருமுறை திருமால் தன் மனைவி லட்சுமியுடன் வைகுண்டத்தில் உள்ள நந்தவனத்தில் உலா வந்தார். பத்து மலர் செடிகளுக்கு நடுவே ஒரு துளசி செடி இருந்தது. துளசி செடி வந்ததும் அதன் அருகே நின்று கொண்ட திருமால், அதன் சிறப்பு பற்றி லட்சுமியிடம் எடுத்துச்சொன்னர். “லட்சுமி! இந்த துளசி அமிர்தத்துக்கு நிகரானது. இதற்கு மரணம் என்பதே இல்லை. இதை நான் மிகவும் விரும்புகிறேன். எத்தனை மாலை அணிவித்தாலும், துளசிமாலை அணிவித்தால் தான் நான் மகிழ்வேன். இதை அணிந்தால் தான் எனக்கு அழகு...” என்றார். தொடர்ந்து ஒவ்வொரு துளசி செடி அருகிலும் நின்று அதன் மகிமையை எடுத்துச் சொன்னார். பத்து மாணவர்கள் சேர்ந்திருக்கிற இடத்திலே, ஒரே ஒரு மாணவரை மட்டும் ஆசிரியர் உயர்த்திப் பேசினால், மற்றவர்களுக்கு பொறாமையோ, கோபமோ தோன்றுவது இயல்பு. அதுபோல துளசி செடிகள் அருகில் இருக்கும் வண்ண மலர்ச் செடிகளுக்கும் பொறாமை ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவா! ஆனால் அந்தச் செடிகள்,“இந்த துளசியின் அருகில் நாம் நின்றதால் தானே, திருமாலும், லட்சுமியும் இங்கே வரும்போது, அவர்களை நாம் ஒருசேர தரிசிக்க முடிகிறது. அவரது பேச்சை கேட்க முடிகிறது. இந்த துளசியின் அருகில் நாங்கள் நிற்க, முற்பிறவிகளில் என்ன பாக்கியம் செய்தோமே!” என்று மகிழ்ந்தன. அதனால் தான் பொறாமை மலிந்து கிடந்த பூலோகத்தை திருத்த பகவான் கிருஷ்ணனாக அவதரித்தார். |
|
|
|