|
இருபது வயதுஇளைஞன்ஒருவனுக்கு உழைக்கமனமில்லை. கால் போன போக்கில் நடந்தான். களைப்பு குதியால்ஓரிடத்தில் அமர்ந்தான். அங்கு ஒருவர் விறகு வெட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு 50 வயது இருக்கும்என யூகித்தான். கண் இமைக்காமல் அவர் மரம் வெட்டுவதையே பார்த்தான்.இதைக் கவனித்த பெரியவர், ஏனப்பா! இப்படி பார்க்கிறாய்? என்றார். கொளுத்தும் வெயிலிலும் சோர்வில்லாமல் ஆர்வமாக வெட்டுகிறீர்களே.... எப்படி? என்று கேட்டான். இது தானே என் வேலை என்றவர், நீ என்ன தொழில் செய்கிறாய்? என்றார் இயல்பாக... நானும் வெட்டியாத் தான் இருக்கிறேன் என்றான் இளைஞன் விரக்தியுடன்.நல்லதா போச்சு.
இனிநாம் இருவரும் சேர்ந்தே வெட்டலாம் என்றார் புன்முறுவலுடன். என்னப் போயி விறகு வெட்டின்னு தப்பா நினைச்சிட்டீங்களே... நான் வேலை இல்லாம வெட்டியா இருக்கிறதைச் சொன்னேன்! என்றான் தலை குனிந்து...தம்பி.... அன்றாடங் காய்ச்சியான எனக்கு விறகு வெட்டினா தான் காசு. ஆனா, முன்னெல்லாம் வெறுப்பா கடனுக்கு வேலை செய்வேன். கண்டபடி மனசு இருந்ததால கடன்காரனா அலைஞ்சேன். ஆனா... இப்போ ..... பெரிய குபேரன் ஆயிட்டீங்களா... என்றான் இளைஞன் குறுக்கே புகுந்து...!...இப்பவும் விறகு தான் வெட்றேன். ஆனால், வெறுப்பு இல்லாம இஷ்டப்பட்டு வேலை செய்றேன். கிடைக்கிற பணத்துல, குடும்பத்தோட நிம்மதியா வாழுறேன். இந்த பரந்த பூமியில வாழ நினைச்சா வாழலாம். வயசு இருபதோ, அம்பதோ வாழ ஆசை இருக்கணும். கிடைச்ச வேலையை விருப்பத்தோடு செய்யணும். கஷ்டப்பட்டு வேலை செய்றேன்கிற வார்த்தையை விட இஷ்டப்பட்டு வேலை செய்யுறேனு சொல்றது தான் சரி... என்றவர், நீ ஏன் வெட்டியாதிரியணும்... தெரிஞ்ச வேலையை செய், என்றார். இளைஞனுக்குள் ஏதோ பொறி தட்டியது. அவன் இப்போது எங்கோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறான். |
|
|
|