|
ராபர்ட் கிளைவ் ஒரு படையோடு, ஆற்காட்டை கைப்பற்ற சென்று கொண்டிருந்தார். வழியில் காஞ்சிபுரத்தில் தங்கியபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எடுத்த காரியத்தை முடிக்காமல்போகிறோம் என்ற பயம் உண்டானது. அன்று வரதராஜரின் திருத்தேர் உற்ஸவம் காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்தது. கிளைவ் தன் உதவியாளர்களை அனுப்பி, அந்த உற்ஸவம் பற்றி அறிந்து வருமாறு அனுப்பினார். அவர்களும் அதுபற்றி கேட்டு வரதராஜரின் மகிமையை எடுத்து சொன்னார்கள். உடனே கிளைவ், தன்னை நோயிலிருந்து காப்பாற்றவும், தன் காரியம் ஜெயம் ஆகவேண்டும் என்றும் வரதராஜரை வேண்டிக்கொண்டார். மறுநாளே கிளைவ் நோய்நீங்கப் பெற்று, படைகளோடு ஆற்காடு சென்று வெற்றியடைந்தார். அங்கிருந்து சென்னை திரும்பும் வழியில் காஞ்சியில் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து நன்றி காணிக்கையாக மரகத மாலை ஒன்றை பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கினார். அப்போது அர்ச்சகர் பெருமாளுக்கு சாமரம் வீசினார். “சாமரம் வீசுகிறீர்களே! அவரை உஷ்ணம் தாக்கி விட்டதா?” என்று கேட்டார். அதற்கு அர்ச்சகர், “இந்த பெருமாள் யாக குண்டத்தில் தோன்றியவர். உஷ்ணமாகவே இருப்பார்,” என்று கூறி ஒரு துண்டினால் பெருமாளின் நெற்றியில் ஒத்தி எடுத்து கிளைவிடம் காண்பித்தார். துணி பெருமாளின் வேர்வையால் ஈரமாயிருந்ததைக் கண்ட கிளைவ் ஆச்சரியப்பட்டார். பரந்தாமனுக்கு எந்த நாடு என்ற பேதமெல்லாம் இல்லை. தன்னை நம்புபவர்களுக்கு அருள் வழங்குகிறார். |
|
|
|