|
கோதாவரி நதி கரையோரம் சில முனிவர்கள், சிவன், வில்வம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்த நான்கு குரங்குகள் முனிவர்கள் பேச்சைக் கேட்டன. அவற்றிற்கு சிவன் மீது பக்தி ஏற்பட்டது. அவை வில்வ இலைகளைப் பறித்துக்கொண்டு அருகே இருந்த சிவாலயத்திற்கு சென்றன. கோவில் உட்புறமாய் தாழிடப்பட்டிருந்தது. உள்ளே புலத்திய முனிவர் சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். இதை அறியாத குரங்குகள் கதவுகளை பெயர்த்து நகர்த்திவிட்டு உள்ளே சென்றன. புலத்தியருக்கு குரங்குகளின் செயல் கோபத்தை ஏற்படுத்தியது. “என்னுடைய பூஜைக்கு இடையூறு செய்த நீங்கள் நால்வரும் அழிந்து போவீர்கள்,” என சாபமிட்டார். குரங்குகள் அவரிடம்,“முனிவரே..நாங்கள் சிவனை பூஜிக்கவே வந்தோம். நீங்கள் உள்ளே இருப்பது எங்களுக்கு தெரியாது. அறியாமல் செய்த தவறுக்கு, எங்களிடம் விளக்கம் கேட்காமலே, தண்டனை தந்த நீங்கள் அடுத்த பிறவியில் உங்கள் குலத்தோடு எங்களால் மடிவீர்கள்,” என சாபமிட்டு விட்டு இறந்து விட்டன. குரங்குகளின் சாபத்தால், புலத்தியர் அடுத்த பிறவியில் ராவணனாகப் பிறந்தார். புலத்திய முனிவரின் சாபத்தால் நான்கு குரங்குகளும் வாலி, சுக்ரீவன், அனுமன், அங்கதன் எனப் பிறந்தனர். அவர்கள் ராமனுக்கு உதவி புரிந்தனர். ராவணனின் வம்சம் அழிந்தது. |
|
|
|