|
ஒரு நாள் கர்கர் என்ற முனிவர், நந்தகோபனைக் காண வந்தார். அவரை வரவேற்று உபசரித்தார் நந்தகோபர். உணவு வேளை வந்தது. தாமே சமைத்துச் சாப்பிட விரும்பிய முனிவர், பாயசம் தயார் செய்தார். அதில் துளசி இலை ஒன்றைப் போட்டவர், மானசிகமாக இந்த நைவேத்தியத்தை ஸ்ரீமந்நாராயணனுக்குச் சமர்ப்பிக்க எண்ணி கண்ணை மூடி தியானித்தார். அப்போது, எங்கிருந்தோ ஓடோடி வந்தான் கண்ணன். குறிப்பிட்ட தூரம் வந்ததும் ஓட்டத்தை நிறுத்தி, பூனை நடை நடந்து முனிவர் வைத்திருந்த பாயசத்தை நெருங்கினான். சட்டென்று அதை எடுக்க மடக் மடக் கென்று பருக ஆரம்பித்தான். இந்த வேளையில் முனிவர் கண் திறந்தார். கண்ணனின் செயல் கண்டு வருந்தினார். நைவேத்தியம் செய்வதற்குள் பாயசத்தைப் பருகிவிட்டானே! என்று யசோதையிடம் புலம்பினார். கண்ணனை அழைத்துக் கண்டித்தாள் யசோதை. அவனா பயப்படுவான்?
சும்மா கோவிக்காதேம்மா... இவர் தான் என்னை அழைத்தார். அதனால் வந்து பாயசம் குடித்தேன்! என்றான் மழலை மொழியில். அடப்பாவி... நான் எப்போது இவனைக் கூப்பிட்டேன் என்று திகைத்தார் முனிவர். பிறகு யமுனை நதிக்குச் சென்று நீராடி வந்து, மீண்டும் பாயசம் தயாரித்தார் கர்கர். மாதவா, கோவிந்தா என்று கூறி அதை நாராயணனுக்கு அர்ப்பணித்தார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த கண்ணன் சட்டென்று கண் விழித்தான். எவருக்கும் தெரியாமல், எழுந்து வந்து பாயசத்தைப் பருகினான். இதைக் கண்ட முனிவர் பெரிதும் கலங்கினார். அப்போது, நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீமந் நாராயணனாக முனிவருக்குக் காட்சி தந்து அருளினான் கண்ணன். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் முனிவர். கண்ணனைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு மீதி பாயசத்தையும் பருகச் செய்தார். அங்கே வந்த யசோதையிடம், அம்மா! ஸ்ரீமந் நாராயணனே உனக்கு மகனாக அவதரித்துள்ளார் என்றார் முனிவர். ஆனால், மகாவிஷ்ணுவாகிய தன் திருவுருவை மாயையால் மறைத்து விட்டான் கண்ணன். ஆம், யசோதைக்கு குழந்தையாகவே தென்பட்டான் அவன். |
|
|
|