|
குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கும், அதற்குமுன் அஸ்தினாபுரத்துக்கு அவன் தூது சென்றபோது, திருதராஷ்டிரருக்கும் தனது விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார். தனக்கு விஸ்வரூப தரிசனம் கிடைத்தது குறித்து அர்ஜுனனும் பெருமை கொண்டிருந்தான். ஒருநாள் அதுகுறித்து கண்ணனிடமும் சொன்னான். உடனே புன்னகையுடன் அவனை ஏறிட்டுப் பார்த்த பகவான், அர்ஜுனா, உனக்கு நான் காட்டிய விஸ்வரூபம் ஒன்றுமே இல்லை. மிகச் சாதாரணமான என் தோற்றமே. இதைவிட மேலான ஒரு விஸ்வரூப தரிசனத்தை வேறு ஒருவருக்குக் காட்டியிருக்கிறேன் என்று பதில் சொன்னான். அர்ஜுனனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, யாருக்கு... எப்போது? எந்த வகையில் அது சிறந்தது? எனக் கேட்டான். நான் குழந்தையாக இருக்கும்போது, என் வாயைத் திறந்து என் தாய் யசோதைக்குக் காட்டிய விஸ்வரூபத்தையே குறிப்பிடுகிறேன் என்றார் பகவான்.
எத்தனை உண்மை! தன்னையே விரிவாக்கிக் கொண்டு விஸ்வத்தில் வியாபித்தது, நானே இந்தப் பரந்த வெளி, நானே இப்பூவுலகு, நானே அண்ட சராசரங்கள் என்று காண்பித்தான் அர்ஜுனனுக்கு. அப்போது அவன் பரந்த விண்வெளியில் சமமாகப் பரவி நின்றான். படைப்பின் உலகங்களும், தேவர்களும், ஜீவராசிகளும், சூரிய சந்திரர்களும் அவன் அங்கமாக நின்றனர். ஆனால் தாய் யசோதை கண்ட விஸ்வரூபமோ மாறுபட்டது. ஒரு சிறு குழந்தை. அதன் பவழச் செவ்வாயில் ஒரு கவளம் தாங்கும் வெளி. அதனுள்ளே அவள் அண்டசராசரங்களும் அடங்கியிருப்பதைக் கண்டாள். படைப்புகள் அனைத்தும் தன் சிறு வாயினுள்தான் அடக்கம். அதனினும் பரந்து நிற்பது தன் குழந்தை வடிவம் எனில், தன்னுடைய உண்மை விராட வடிவம் எத்தனைப் பெரியது என்பதைச் சொல்லாமல் உணர்த்தினான், கண்ணன். யசோதை பாவம்! அகிலம் அனைத்தையும் தன்னுள் அடக்கி நின்ற அந்தச் சிறு குழந்தையை, தான் அடக்கி வைத்திருப்பதாக அவள் எண்ணியிருந்தாள். அந்தக் குழந்தையும் அவளுக்கு அடங்கி நடப்பதுபோல நடித்ததுடன், அவளையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. இது, அந்த அன்புத் தாய்க்குத் தெரியாது. இருந்தாலும், அவள் பாக்கியசாலிதான்! |
|
|
|