|
பிருந்தாவனத்தில் ஒரு கிழவி இருந்தாள். பழங்களை விற்று பிழைத்து வந்தாள். அருமையாகப் பாடுபவாள். அவளின் பாட்டுக்காகவே நிறைய பழங்கள் விற்றுத் தீரும். சில நேரம் குழந்தைகளின் விளையாட்டில் மெய்மறந்து, சும்மாவே பழங்களை அவர்களுக்குக் கொடுப்பாள். கோகுலத்தில் கிருஷ்ணன், பலராமன் என்ற குழந்தைகளின் அதிசயங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட பாட்டி, ஒருநாள் அங்கே சென்றாள். செக்கச் சிவந்த மாதுளைகளை எடுத்துச் சென்றிருந்தாள். நந்தகோபன் வீட்டு வாயிற் காப்போன் என்ன வேண்டும் பாட்டி உனக்கு? என்றான். அழகான குழந்தைங்க இரண்டு இங்க இருக்காமே. அவங்கள பாக்க வந்தேன் என்றாள். யாரது... குழந்தைகளைப் பத்தி பேசறது? கிருஷ்ணனை தூக்கிக் கொண்டபடி வந்தாள் யசோதை. அந்தப் பாட்டியை அவளுக்குத் தெரியும்! ஏற்கெனவே அவளிடம் பழங்கள் வாங்கியிருக்கிறாளே!
அட, பழக்காரப் பாட்டியா. எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோமே? என்றாள் யசோதை. அடடே... உன் பையனா இவன். எவ்ளோ அழகா இருக்கான்! ஆமா உன் பேரு என்ன? கேட்டாள் பாட்டி. கிருஷ்ணன். கிருஷ்ணா! ஆகா.... உன்னைத்தான் பாக்கணும்னு இங்க வந்தேன். சொல்லிவிட்டு கிருஷ்ணனைப் பார்த்தாள். யசோதையின் மடியை விட்டு கீழே இறங்கிய கிருஷ்ணன், பழக்கூடையில் இருந்து ஒரு பழத்தை எடுக்க முயற்சி செய்தான். ஏதாவது கொடு. பழம் தரேன் என்றாள் பாட்டி. வீட்டின் உள்ளே சென்ற கிருஷ்ணன் தன் சின்னஞ் சிறு கையால் அரிசிப் பானையிலிருந்து ஒரு பிடி அரிசியை எடுத்து வந்தான். அவன் நடந்து வருவதற்குள், அந்தக் கைப்பிடி அரிசியும் சிந்திவிட்டது. கிழவியிடம் கையை நீட்டும்போது ஒரு சில அரிசி மணிகளே இருந்தன. அவற்றைக் கூடையில் போட்டான். சிரித்த கிழவி, அவனை வாரி மடியில் இருத்திக் கொண்டாள். வேண்டிய பழத்தை நீயே எடுத்துக்கொள் என்றாள் அந்தப் பாட்டி. கிருஷ்ணன் ஒரு பழத்தை எடுத்துக் கொண்டான். யசோதை அவனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். கிழவி பாடியபடியே திரும்பிச் சென்றாள். வழியெல்லாம் அவள் நினைவு கிருஷ்ணன் மீதே இருந்தது. வீடு திரும்பிய பின்னர்தான் கூடை கனமாக இருப்பதை உணர்ந்தாள் கிழவி. கிருஷ்ணன் போட்டிருந்த அரிசி மணிகள் முத்து, பவழம், வைரம், வைடூர்ய ரத்தினங்களாகக் கூடையில் இருந்தன. கிருஷ்ணா! என்று அவள் மனம் உரக்கக் கூவியது. ஆனால், வெளியில் எதுவும் கேட்கவில்லை. |
|
|
|