|
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், யோகம் எனப்படுவது துன்பத்தோடு இணைத்துக்கொள்வதிலிருந்து பிரித்துக் கொள்வது என்று அறிந்து கொள்க! இந்த தியானயோகமானது உறுதியுடனும், தளர்வில்லா மனதுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தைக் கூறியருளினார். ஸமாதிக்குப் பல்வேறு இலக்கணங்களை இவ்வாறு கூறிய பகவான், தியான ஸ்வரூபத்தை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறார்.
ஸங்கல்ப ப்ராபவாந் காமாந் த்யக்த்வா ஸர்வாநக்ஷேத: மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத: (ஸ்ரீமத்பகவத்கீதை 6-24)
எண்ணங்களிலிருந்து எழும் அனைத்து ஆசைகளையும் ஒன்றுவிடாமல் விட்டுவிட்டு, அனைத்துத் திசைகளிலும் இந்த்ரிய கூட்டங்களை மனதாலேயே கட்டுக்குள் வைக்க வேண்டும். மனதை புறவுலக எண்ணங்களிலிருந்து மீட்டெடுத்தால்தான் ஒருவர் தியானத்தில் ஈடுபட முடியும். இருபது நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டுமானால், அந்த இருபது நிமிடங்களும் மனம் வேறு எதைப் பற்றியும் எண்ணக் கூடாது. மனம் என்பது மிக விநோதமானது. மாறிக் கொண்டே இருக்கின்ற எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தியானத்துக்கு மனதைத் தயார்ப்படுத்த வேண்டும். முதலில் புறவுலக எண்ணங்களை நீக்க வேண்டும். அடுத்து, நம்மைச் சுற்றியுள்ள குடும்பத்தினர், நண்பர்களைப் பற்றிய எண்ணங்களை நீக்க வேண்டும். நம்முடைய உடலைப் பற்றிய எண்ணத்தையும் நீக்க வேண்டும். மனதை இந்த எண்ணங்களிலிருந்தெல்லாம் மீட்டெடுக்க வேண்டும்.
ஸங்கல்ப ப்ரபவாந் ஸர்வாந் காமாந் என்று பகவான் இங்கு குறிப்பிடுவது, நம்முடைய மனத் திட்டங்களே ஆகும். வருங்காலத்தை வடிவமைப்படுத்திலேயே பலர் நிகழ்காலத்தை இழந்து விடுகின்றனர். பெரும்பாலானவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை. எல்லா நாட்களுமே அடுத்த நாளுக்கான திட்டமிடலாக அமைந்திருக்கின்றன. யமதர்மராஜா வரும்பொழுதுதான், அவர்கள் வாழவேயில்லை என்பது அவர்களுக்கே விளங்கும். ஓயாத திட்டமிடல், இடைவிடாத கனவுகள், உலகியல் குறிக்கோள்கள் என்று பல்வேறு எண்ணங்கள் உள்ளத்தை அலைக்கழிக்கும்போது, தியானம் என்பது ஸாத்தியமே அல்ல. ஆனால் தியானத்தில் அமர்ந்தவுடன் மனதை ஒருநிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்றுதான் எல்லோருமே விரும்புகிறார்கள். அதனை எவ்வாறு செய்வது என்பதுதான் அவர்களுக்கு விளங்கவில்லை. ஒவ்வொரு ஆசையும் ஓர் எண்ணம் அல்லது ஸங்கல்பத்திலிருந்து பிறக்கிறது. முதலில் தோன்றும் ஓர் எண்ணம் மிக பலவீனமானது. அதனைக் கிள்ளி எறிதல் மிக எளிது. நாம் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது இந்த முதல் எண்ணத்தில்தான்.
கடலில் தோன்றும் அலைகளில் முதலில் தோன்றும் அலை, சிறியதாக பலமற்றதாகத்தான் இருக்கும். காற்றுதான் அதனைப் பெரிதாக்குகிறது. அதனைப் போன்று, ஒரு சிறு எண்ணத்தை நாம்தான் நம்முடைய ஆசைகளால் ஊதி வளர்த்துப் பெரிதாக்குகிறோம். கோபம், பொறாமை முதலியவை முதலில் சிறு எண்ணமாகத்தான் இருக்கின்றன. நாம்தான் அவற்றை வளர்க்கிறோம். முதல் எண்ணம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை, அது தானாகத் தோன்றுகிறது. ஆனால், அந்த எண்ணத்துக்கு ஆதரவு கொடுத்து, அதனைமென்மேலும் வளர்ப்பதும் நம் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. பகவான் கீதையில் இரண்டாவது அத்தியாயத்திலேயே எண்ணங்களில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத் கூறியருளினார்.
த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷுபஜாயதே ஸங்காத் ஸஞ்ஜாயத காம: காமாத் க்ரோதோ பிஜாயதே (ஸ்ரீமத்பகவத்கீதை: 2-62)
மனிதன் ஒரு பொருளை எண்ணுகிறான். அதன் மீது பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையாக வடிவெடுக்கிறது. நிறைவேறாத ஆசை கோபமாக வெளிப்படுகிறது. கோபத்தினால் மோஹமும், மோஹத்தினால் நினைவாற்றலை இழத்தலும், அறிவை இழத்தலும் ஏற்பட்டு, பிறகு அவனே அழிந்துபோகிறான் என்று கூறுகிறார். எனவே, எண்ணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எண்ணங்களை இவ்வாறு அப்புறப்படுத்துவதோடு, இந்த்ரியத்தின் வாயில்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றின் வழியாக உள்ளே நுழையும் விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த அறிவுக்கருவிகளின் வாயிலாகத்தான் உலகம் நம் மனதினுள் நுழைகிறது. எனவே, எதைப் பார்க்கிறோம், எதைக் கேட்கிறோம், எதை முகருகிறோம், எதை உணர்கிறோம், எதைத் தொட்டுணர்கிறோம் ஆகியவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவற்றில் கட்டுப்பாடு இருந்தால்தான், பொறிகள் மனதுக்குக் கட்டுப்பட்டால்தான் தியானம் வெற்றி பெறும். உரிய பலனாகிய மன அமைதியைத் தரும். எனவே, மனவடக்கம், புலனடக்கம் ஆகிய இரண்டும் தியானத்துக்கு இன்றியமையாதவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். |
|
|
|