Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பகவானின் சத்தியமும் பீஷ்மரின் சபதமும்!
 
பக்தி கதைகள்
பகவானின் சத்தியமும் பீஷ்மரின் சபதமும்!

பீஷ்ம பிதாமகர், கிருஷ்ண பகவானை ஆயிரம் பெயர்களால் வணங்கியதே பிற்காலத்தில், விஷ்ணு சஹஸ்ர நாமம் எனப் பெயர் பெற்றது. மகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும் நன்குணர்ந்தவர் பீஷ்மர். கிருஷ்ணனை குழந்தையில் இருந்து கண்டு ரசிக்கும் பெரும்பேறு பெற்ற அவர், அப்போதுதான் சில நாட்களுக்கு முன்பு, தானே நேரடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை குறிப்பிட்டு பகவானைத் துதிக்கிறார்.

ரதாங்கபாணி ரக்ஷோப்ய:
சர்வப் பிரஹரண ஆயுதஹ

இதன் பின்புலம் என்ன?

குரு க்ஷேத்திரத்தில் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஓர் இரவு. துரியோதனன் பீஷ்மாச்சார்யரிடம் வந்து நிர்பந்தித்துப் பேசுகிறான். பிதாமகரே, பீமனும், அர்ஜுனனும் நம் படையை துவம்சம் செய்கிறார்கள். பல யானைகளை, தேர்களை முடக்கி விட்டார்கள். கிருஷ்ணனோ, ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று வாக்களித்து இருந்தாலும், தன்னுடைய சூழ்ச்சியால் அவர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்கிறார். நீங்கள் நாளைக்காவது அர்ஜுனனை நேரடியாக சந்தித்துத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிறான். ராஜ துரோகம் செய்தல் தர்மமாகாது என்பதால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார் பீஷ்மர்.

துரியோதனன் கூடாரத்தைவிட்டு வெளியேறியவுடன், முக்காடிட்டு, குனிந்த தலையுடன் ஒரு பெண் பீஷ்மரை நமஸ்கரிக்கிறாள். தீர்க்க சுமங்கலி பவ என்று ஆசிர்வதிக்கிறார் பீஷ்மர். முக்காடு விலக்கி தலை நிமிர்ந்தால் தெரிகிறது, அர்ஜுனன் மனைவி சுபத்திரையின் மேகம் விலகிய நிலவு போன்ற முகம். பிதாமகரே, உங்கள் வாயால் என்னை தீர்க்க சுமங்கலியாக இருக்கும்படி வாழ்த்தினீர்கள். ஆகவே, என் கணவனை நீங்கள் போரில் கொல்லக் கூடாது என்று அவரது காலைப் பிடித்துக் கொண்டு அழுகிறாள்.

எதிர்பாராத இந்த நிகழ்வால் ஆச்சரியம் அடைந்த பிதாமகர். கூடாரத்துக்கு வெளியே ஓடி வந்து பார்க்கிறார். ஓரத்தில் கிருஷ்ண பகவான் ஒளிந்துகொண்டு இருக்கிறார். கிருஷ்ணா, இதுவும் உன் விளையாட்டு தானா? என் வாக்கை மீறி நான் அர்ஜுனனைக் கொல்ல முடியாது என்ற நிலையைக் கொண்டு வந்த உன்னை, நீ துரியோதனனுக்குக் கொடுத்த வாக்கை மீறி, உன்னை ஆயுதமேந்த வைக்கிறேன் பார் என்று சபதமெடுக்கிறார் பீஷ்மர்.

அடுத்த நாள் போரில், துரியோதனனுக்கு கொடுத்த வாக்குப்படி, அர்ஜுனனை கொல்லத்தான் முடியாது; ஆனால், நிராயுதபாணியாக்கிக் கைது செய்திட முடியுமே என்று அர்ஜுனனுடன் போர் செய்கிறார் பீஷ்மர். அர்ஜுனன் மேல் அம்பு எய்யாமல், அவனது வில்லைக் குறி வைத்து அம்பெய்கிறார். அர்ஜுனன் பல விற்களுக்கு பலப்பிரயோகம் செய்து நாணேற்ற ஒவ்வொன்றையும் உடைத்தெறிகின்றன பீஷ்மரின் அம்புகள். தொடர்ந்த தாக்குதலால் அர்ஜுனன் மூர்ச்சையாகி சரிகிறான்.

தன் நண்பனும் பக்தனுமாகிய அர்ஜுனன், தன் கண் முன்னால் சரிந்து விழுவதைக் கண்டு பதைபதைக்கிறார் கிருஷ்ணர். கோபம் பொங்க, தேரிலிருந்து குதித்து, பீமனின் கதையில் அடிபட்டு நொறுங்கியிருந்த ஒரு தேரின் சக்கரத்தை கையிலெடுத்து பீஷ்மரை அடிக்கச் செல்கிறார். பீஷ்மரோ, ஆஹா, பகவான் கையால் மோக்ஷமா? என்ன புண்ணியம் செய்தேன் என்று வில்லம்புகளை உதறி நிற்கிறார். மயக்கம் தெளிந்த அர்ஜுனன், கிருஷ்ணா, ஆயுத மேந்த மாட்டேன் என்ற சத்தியத்தை மீறி பிதாமகரைக் கொல்லாதே என பகவானின் காலைப் பிடித்துக் கொள்ள, பகவானும் திரும்புகிறார்; பீஷ்மரின் சபதமும் நிறைவேறியது.

ரதாங்கம் =ரத+அங்கம் =தேர்+பகுதி. தேரின் பகுதியான சக்கரத்தை கையிலெடுத்து, ஆபத்தில் இருக்கும் பக்தனை ரக்ஷித்ததை கண்ணெதிரில் கண்ட பீஷ்மர், மகாவிஷ்ணுவை, ரதாங்கபாணி ரக்ஷோப்ய என்று துதிக்கிறார்.

வராக அவதாரத்தில் கொம்பு போல் வளர்ந்த பல்லை ஆயுதமாய்க் கொண்டு பூமாதேவியை மீட்டவன், கூர்மாவதாரத்தில் ஆமையாய் ஓட்டையும், தேவர்களுக்கு மட்டுமே அமிர்தம் கொடுக்க மோகினியாய் வந்து அழகையும் ஆயுதமாய் பயன்படுத்தியவன். நரசிம்ம அவதாரத்தில் நகத்தையே ஆயுதமாக்கி பிரஹலாதனை ரட்சித்தவன். வாமன அவதாரத்தில் தர்ப்பைப் புல்லை கமண்டலத்தில் நுழைத்து ஆயுதமாய்ப் பயன்படுத்திய வல்லவன். ராமாவதாரத்தில் வில்லையும், பலராமனாய் கலப்பையையும், பரசுராமனாய் கோடாரியையும், கிருஷ்ணனாய் சக்கரத்தையும் ஆயுதமாய்ப் பயன்படுத்தத் தெரிந்தவன். சர்வத்தையும் ஆயுதமாய்ப் பயன்படுத்தத் தெரிந்த அவனையல்லாமல் வேறு யாரை சர்வப் பிரஹரன ஆயுதஹ என்று துதிக்க முடியும்? பக்தனுக்கு ஆபத்து என்றால் நாள், நேரம் பார்க்க மாட்டார் பகவான். கொடுத்த சத்தியத்தைக்கூட விட்டு விட்டு காப்பாற்ற வருவார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar