|
துவாரகையில் புகழ் பெற்ற ஓவியன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு சமயம் கிருஷ்ணரிடம், சுவாமி, தங்கள் திருவுருவத்தை நான் ஓவியமாக வரையப்போகிறேன் என்றான். அதற்கு பகவானும் சம்மதித்தார். ஒரு வாரம் கழித்து ஓவியன் கிருஷ்ணரின் படத்தை எடுத்துக் கொண்டு வந்தான். மூடியிருந்த துணியை அகற்றியபோது, அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால், அந்தப் படம் கிருஷ்ணரது உருவம் போலவே இல்லை! ஓவியன் மீண்டும் மீண்டும் வரைந்தான். ஒவ்வொரு முறையும் அதுபோலவே நடந்தது. அதனால் ஓவியன் துவாரகையை விட்டே ஓடிப் போனான். வழியில் நாரத மகரிஷி வந்தார். ஓவியன் விஷயத்தைச் சொன்னான். நாரதர் புன்சிரிப்புடன் அசடனே, சுவாமிக்கு என்று தனியாக ஓர் உருவம் கிடையாது. எல்லா வடிவங்களும் அவருடையதே. நான் சொல்கிற படி செய். பிறகு வெற்றி உனக்குத்தான் என்று ஓவியன் காதில் ஏதோ ரகசியமாய்க் கூறினார்.
நாரதர் சொல்லைக் கேட்ட ஓவியன் மீண்டும் கிருஷ்ணரிடம் ஓடினான். சுவாமி, நீங்கள் இந்த முறை எப்படி உருமாறினாலும் படம் உங்களைப் போலவே இருக்கும் என்று சொல்லி தன்னிடம் இருக்கும் பொருளைத் திறந்து காட்டினான். அது ஒரு நிலைக்கண்ணாடி அதில் பகவானின் முகம் அப்படியே தெரிந்தது! இதிலிருந்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. நம் மனதையும் கண்ணாடியைப் போல சுத்தமாக வைத்திருந்தால் அதில் இறைவனின் வடிவம் அப்படியே தெரியும் என்பதுதான். |
|
|
|