|
பெருமாளுக்கு தன்னை வணங்குபவர்களை விட, தன் பக்தர்களுக்கு மரியாதை செய்பவர்களை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இன்று அவரது பக்தனான பிரகலாதனின் முற்பிறவி வரலாறை அறிவோம். துவாரகையில் வசித்த சிவசர்மா, வேத சாஸ்திரங்களை கற்று புலமை பெற்றவர். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களுக்கு அவரே குருவாக இருந்து வேதம் கற்றுக் கொடுத்தார். வேதம் படிப்பவர்கள் குருவுக்கும் பெற்றோருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என்பது விதி. தன் மகன்கள் அவ்வாறு இருக்கின்றனரா என சோதிக்க ஒரு தந்திரம் செய்தார் சிவசர்மா.தன் மனைவி இறந்து கிடப்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, மூத்த மகன் யக்ஞசர்மாவை அழைத்தார். அவனிடம், “உன் தாய் இறந்துவிட்டாள். அவளது உடலை வாளால் வெட்டி வீசி விடு!’ என்றார். அவனும் அப்படியே செய்தான். பின் ஒரு அழகிய பெண்ணைப் படைத்து, இரண்டாவது மகன் வேதசர்மாவை அழைத்தார். அவனிடம் அப்பெண்ணை, தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டார். வேதசர்மா அவளிடம். தன் தந்தையை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளோ, “உன் தந்தையை மணந்து கொள்ள வேண்டுமானால், உன் தலை எனக்கு வேண்டும்,” என்றாள். அவனும் தன் தலையை வெட்டிக் கொண்டான். அடுத்து மூன்றாவது மகன் தர்மசர்மாவை அழைத்தார்.
அவனிடம் வெட்டுப்பட்ட வேதசர்மாவின் தலையை கொடுத்து, ‘அதைப் பத்திரமாக வைத்திரு’ என்றார். அவன் அதை வாங்கி தர்மதேவதையை வணங்கி உயிர்ப்பித்தான். நான்காவது மகன் விஷ்ணுசர்மாவை சோதிக்க வேண்டியநிலை. சிவசர்மா அவனிடம், “நான் ஒரு அழகியை மணக்க விரும்புகிறேன். ஆனால் வயதாகி விட்டது. மீண்டும் இளமையைப் பெற அமிர்தம் உண்டால் மட்டுமே முடியும். எனவே, தேவலோகம் சென்று அமிர்தம் பெற்று வா,” என்றார். அவனும் தேவலோகம் சென்றான். இந்திரன், மேனகை என்னும் தேவலோக அழகியைக் கொண்டு அவனது கவனத்தை திசைதிருப்ப முயன்றான். அவனோ அதைக் கண்டுகொள்ளாமல், வேலையில் மட்டும் கவனமாக இருந்து அமுதம் பெற்று, தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா நான்கு மகன்களையும் அழைத்தார். தன் மனைவியை உயிர்ப்பித்து, தான் அவர்களை பரிசோதித்ததை கூறினார். மகன்களும் மகிழ்ந்தனர். அவர்களை விஷ்ணு லோகத்திற்கு அனுப்பி விட்டார் சிவசர்மா. பின்னர் ஐந்தாவது மகன் சோமசர்மாவுடன் வாழ்ந்து வந்தார். சோமசர்மா பெருமாள் மீது அதீத பக்தியுடையவன்.
ஒரு சமயம் சிவசர்மா அவனிடம்,‘ நானும், உன் தாயாரும் தல யாத்திரை செல்கிறோம். நாங்கள் திரும்பும் வரையில் இந்த அமிர்த கலசத்தைப் பத்திரமாக வைத்திரு’ என்று சொல்லிச் சென்றார். சிலநாட்கள் கழித்து ஊர் திரும்பிய சிவசர்மா, கலசத்தில் இருந்த அமிர்தத்தை மறையச் செய்தார். மகனிடம் அமிர்த கலசத்தைக் கொண்டு வரும்படி சொன்னார். அவன் அமிர்த கலசத்தை பார்த்து அது காலியாக இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். மிகுந்த வருத்தத்துடன் பெருமாளைப் பிரார்த்தித்தான். அமிர்த கலசம் நிரம்பியது. அதை தன் பெற்றோரிடம் கொடுத்தான். அமிர்தம் உண்ட இருவரும் சோமசர்மாவை வாழ்த்திவிட்டு விஷ்ணுலோகம் சென்றனர். பின் பூலோகத்தில் தனித்து வாழ்ந்த சோமசர்மா, தவ வாழ்க்கையில் ஈடுபட்டான். ஒரு சமயம் தவத்தை கெடுக்க வந்த அசுரர்களைக் கண்டு பயத்திலேயே உயிர் விட்டான். அந்த அசுரகுலத்தை வேரறுக்க, மறுபிறவியில் அதே குலத்தில் இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனாக பிறந்தான். நரசிம்ம அவதாரம் தோன்றக் காரணமாக இருந்தான். |
|
|
|