|
பக்தி என்பது குருட்டு நம்பிக்கை அல்ல, அல்லது சாஸ்திரங்களில் கூறியவற்றை அப்படியே ஒப்புக் கொள்வது அல்ல, பரம்பொருளின் கருணையையும் கம்பீரத்தையும் அறியும் அறிவுடன் அவனிடம் கொள்ளும் மாறாத அன்புதான் பக்தி, ஆழ்ந்த சாஸ்திர ஞானத்தால் பக்தி மேலோங்கி வளரும். அதுவே தூய்மையான புனிதமான பக்தி, ஈடுபாட்டோடு செய்கின்ற பக்தி தனிச் சிறப்பையடைகிறது. கடவுளைத் தொழுவதோடு பக்தி நின்று விடுவதில்லை. பக்தி சமூகத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உள்ளடக்கியதாகும். பரமனிடம் அன்பும் பிரேமையும் செலுத்துவது போன்று சமூகத்தில் நாம் பழகும் ஒவ்வொரு அங்கத்தினருடனும் அன்பையும் கருணையையும் வழங்க வேண்டும். பகவத் கீதை என்ன சொல்கிறது என்றால் பக்தி என்பது உணர்ச்சி வசப்படுதலோ ஆவேசப்படுதலோ அல்ல என்று சொல்கிறது. மாறாக, பணிவும், பரிவும், தொண்டு செய்தலும் பகவானுக்கும், ஏனைய ஜீவராசிகளுக்கும் தொண்டு செய்தல் - பக்தியின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். பிறரிடம் வெறுப்புக் கொள்ளாமலிருத்தல், பகைமை பாராட்டாமல் நேசக்கரம் நீட்டுதல், சோர்வில்லாமல் ஊக்கமுடன் காரியங்களைப் பலன் எதிர்பாராமல் செய்தல் இவையே பக்தியின் விசேஷங்களாகும்.
ஒரு உண்மையான பக்தனுக்கு என்னென்ன விசேஷகுணங்கள் அமையவேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணன் கூறுகிறார். எல்லா உயிர்களிடத்தும் பகைமை கொள்ளாதவனாய், நட்பு பூண்டவனாகவும் கருணை உடையவனாகவும், என்னுடையது, நான் என்னும் மமகாரம் அகங்காரம் இல்லாதவனாக, இன்ப துன்பங்களை சமமாய் கருதுபவனாய், பொறுமை, சந்தோஷம் உடையவனாக அடங்கிய மனத்தவனாய், திடமான நிச்சயம் உடையவனாய், மனத்தையும் புத்தியையும் என்னிடம் சமர்ப்பணம் செய்யும் பக்தன் எனக்கு பிரியமானவன் என்கிறார் பகவான்.
அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவச நிர்மமோ நிரஹங்கார: ஸமதுக்க ஸுக க்ஷமீ (13) ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிச்சய: மய்யர்பித மனோபுத்திர் -யோ மத்பக்த: ஸமே ப்ரிய: (12-14)
கடவுள் நம்பிக்கை என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்க வேண்டும். பிரஹ்லாத பக்தி இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அதீத அபரிமித பக்தி அந்த சிறுவனுடைய பக்தி. பக்தியால் கடவுளையும் கட்டிப் போடலாம். உன்னை இரட்சிக்க அவன் ஓடோடி வருவான். பகவான் உன்னிடம் ஏதாவது எதிர் பார்க்கிறானா? பொன்னையும் பொருளையும் அவன் காலடியில் குவித்தால் பக்தியாகி விடுமா? நாம் அநுபவிப்பதெல்லாம் அவன் கொடுத்தவை உரிமை அவனுக்கே. அப்படியிருக்க என் செல்வமெல்லாம் அவனுக்கு அர்ப்பணம் செய்தேன் என்று நீ எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? நீ அநுபவிக்கும் பலன்களை அவனுக்கு தத்தம், செய்து விடு. ஐம்புலனடக்கிய பக்தன் கொடுப்பது சிறிய பொருளேயானாலும் - அது ஒரு பத்ரம் -(இலை- துளசி), அல்லது பழமோ அல்லது பூவாகக் கூட இருக்கலாம். ஒன்றும் கிடைக்கவில்லையா? ஒரு உத்தரணி தண்ணீர் அர்ப்பணம் செய்தாலும் போதும், அவன் உண்மையான பக்தனாக இருந்தால் பகவான் அதிலேயே திருப்தி அடைந்து விடுகிறான். கண்ணன் கீதையில் இதைத்தான் சொல்கிறான்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்னாமி ப்ரயதாத்மன: (9-26)
மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. திரௌபதி கிருஷ்ணனிடம் அதி தீவிர பக்தியும் பிரேமையும் கொண்டிருந்தவள். கிருஷ்ணன் ஒருநாள் திடீரென்று திரௌபதியிடம் வந்து தனக்கு உணவளிக்கு மாறு கேட்கிறான். ஆனால் திரௌபதியும் பாண்டவர்களும் முன்னமேயே உண வருந்தி விட்டதால் அட்சய பாத்திரம் காலியாகி விட்டது. இதற்கிடையில் கோபத்தின் மறுஉருவமாக துர்வாச முனிவரும் அவருடைய சீடர்களும் உணவருந்த வருவதாகச் சொல்லி விட்டு நீராடப் போய் விட்டனர். திரௌபதி உணவுக்கே எங்கே போவாள்? பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள், திரௌபதி, ஒரேயொரு பருக்கை மட்டும் அதில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதுபோதும் என்கிறார் பகவான், உள்ளன்போடு அதனைக் கண்ணனுக்கு சமர்ப்பிக்கிறாள். கண்ணன் வயிறு நிரம்பி விடுகிறது. அது மட்டுமல்ல, துர்வாச முனிவர் அவருடைய சீடர்களுடைய வயிறும் நிறைந்து விடுகிறது. தங்களுக்கு பசி இல்லை என்று சொல்லிவிட்டு அவர்களும் நீங்கி விடுகின்றனர். இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலிருந்தும், துர்வாசருடைய கோபத்திலிருந்தும் திரௌபதியைக் காப்பாற்றினார். பகவான் இப்படி ஒரு மாயத்தைச் செய்ததும் கண்ணனே.
தன் வலியையும் பொருட்படுத்தாமல் ஒரேயொரு பூவை அர்ச்சித்த கஜேந்திரனுக்கு ஆதி மூலமே என்று ஓலமிட்டபோது, இறைவன் உடனே அருள் புரிந்து மோட்சமளித்தான். இராமன் என்ற மானிட ரூபத்தில் வந்த பகவானுக்கு அன்போடு கனிகளை ஈந்த சபரிக்கு மோட்சம் கிடைக்கவில்லையா? பக்தியின் எல்லை, அன்பின் ஆழம் எத்தகையது என்பதை இக்கதைகள் நமக்கு கூறுகின்றன. தங்களிடம் கொடுப்பதற்கு எத்தகைய பொருளும் உண்மையிலேயே இல்லாத ஏழை பக்தர்களுக்கு இது பொருந்தும், ஆனால் வசதி படைத்த செல்வந்தர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு இறைவனுக்கு விலை உயர்ந்த பொருள்களை காணிக்கையாக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் அப்படிச் செய்யும்போது நான் செய்கிறேன் என்னும் செருக்கு இருக்கக் கூடாது. அவன் கொடுத்ததை அவனுக்கே சமர்ப்பிப்தாக எண்ணிச் செய்தல் வேண்டும். அத்தகைய எளிமையே தேவை. இறைவனுக்குத் தெரியும் நீ யாரென்று. அவனை ஏமாற்ற நினைக்கக் கூடாது. உண்மையான பக்தர்கள் அன்பால் பிணைக்கப்பட்டவர்கள். எந்த விதமான பிரதிபலனையும் எதிர்நோக்காது தங்களுடைய உடமைகள் யாவையும் பகவானுக்கு அர்ப்பணித்து விடுவார்கள். அவர்களுக்கு தேவையானதை தக்க தருணத்தில் அளிக்க பகவான் தயாராக இருப்பான். |
|
|
|