|
பகவானை வழிபட வேண்டும் என்பது நமக்கு பகவானே கொடுத்துள்ள உரிமை. அது மட்டுமல்ல, அது ஒரு வரப்பிரசாதமுமாகும். இது மற்ற உயிரினங்களுக்கு கிடைக்காத வரமாகும். கடவுளை தினசரி சிறிது நேரமாவது தியானம் செய்வது என்பது நம் தினசரி அலுவல்களில் ஒன்றாக இருக்க வேண்டும். பகவான் கண்ணன் தன்னை வழிபடுமாறும், மனசை அவன்பால் செலுத்தி தன்னையே கதி என்று வணங்கினால் என்னை அடைவாய் என்று உறுதி கூறுகிறான்.
மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமே வைஷ்யஸி யுக்த் வைவம் ஆத்மானம் மத் பராயண: (9.34)
ஒரு சமயம் ஒரு பக்தன் இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டானாம். பகவானே! நான் இரண்டு குற்றங்கள் செய்து விட்டேன். என்ன என்று கேள்! ஒன்று, நான் முந்தைய பிறவியில் உன்னைப் பற்றி சிந்திக்காமல், உன்னைத் தொழாமல் வாளா இருந்து விட்டேன். அப்படி உன்னைத் தொழாத காரணத்தால் எனக்கு மோட்சம் கிட்டவில்லை. மீண்டும் இந்த ஜென்மத்தில் மனிதனாகப் பிறந்து அல்லல் படுகிறேன். சரி, இந்த ஜென்மத்திலும் ஒரு குற்றம் செய்து விட்டேன். அதுதான் உன்னை தினசரி வழிபடுகின்ற குற்றம்! வழிபட்டதும் குற்றம் தான். ஏனென்றால் இப்படி வழிபடுவதால் எனக்கு ஜனன மரணப் பிடியிலிருந்து நீ மோட்சம் அளித்து விடப் போகிறாய். இனி எனக்கு மறு ஜன்மம் கிடையாது. ஆகவே மீண்டும் பிறவி எடுத்து உன்னைத் தொழுகின்ற வாய்ப்பும் உரிமையும் எனக்கு இல்லாது போய் விட்டதே என்று புலம்பினானாம். இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் பகவானை சர்வ சதா நாம் தியானித்து தொழுது அவன் நாமாவை உச்சரித்துக் கொண்டேயிருப்பதில் உள்ள ஆனந்தம் எதிலும் இல்லை என்பதாம். நாம ஜெபமே ஜென்ம சாபல்யம், முக்தி நிலைக்கு வாயிற்படி.
நாம் எல்லோரும் கடவுள் வழிபாடு என்பதை ஏதோ கடமைக்குச் செய்வது போல் காரியார்த்தமாகத்தான் செய்து வருகிறோம். அதில் நாம் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு செய்து வருகிறோம். என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். பக்தியில் ஆழமும் தீவிரமும் இருக்க வேண்டும். இல்லையேல் அது பலன் தராது. ஆதிசங்கரர் தன் சிவபுஜங்க ஸ்தோத்திரத்தில் கூறுவார். நாமெல்லோரும் குறையுடைய மனிதர்கள் தான். இருந்தாலும் இறைவன் நம்மை மன்னித்து ஆட்கொள்வான். அவன் கருணை நம் பக்கம் இருக்கும். இறைவனை நிந்தித்தவர்களையும் அவன் ஆட்கொண்டதாக புராணங்களில் சான்றுகள் உள்ளன. அப்படியிருக்கும்போது, இந்த ஏழையை இறைவன் கைவிடமாட்டான். இறைவன் பக்தனிடம் எதிர்பார்ப்பது எல்லாம், அவன் தன் போலித்தனத்தையும் கபட வேஷங்களையும் விட்டுத் தான் எளியவன் என்பதை உணர்ந்து பக்தி செய்ய வேண்டும் என்பதே. பெருமையும் கர்வமும் மனிதனிடம் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீ எந்த நிலையிலிருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியிலிருந்தாலும், இறைவன் முன்னால் நீ ஒரு துரும்பே. அவன் என்றும் கருணை மிக்கவன். அவன் நம் குற்றங்களையெல்லாம் ஒதுக்கி விடுவான், எப்போது? நாம் அவனிடம் சரணடைந்தால், அவனுக்கே நம்மை அர்ப்பணித்து தொழுது வந்தால், மற்றதை எல்லாம் அவன் கவனித்துக் கொள்வான். நம்முடைய ஈடுபாடு பகவானிடம் எத்தகையது என்பதுதான் முக்கியம்.
ஆகவே மன நிறைவோடு நம் பிரார்த்தனைகள், வழிபாடுகள் அமைய வேண்டும், உலக சுக போகங்களைத் தேடி அதற்காக இறைவனை நாடி வழிபாடு செய்தால் அது சுயநலம். அது உண்மையான வழிபாடு ஆகாது. பகவான் பல அவதாரங்கள் எடுத்ததன் நோக்கம். நாம் அவனைச் சுலபமாகத் தியானித்து மனதில் அவனை நிலை நிறுத்தவே, சாத்திரங்கள் அவன் கருணையையும் லீலா விநோதங்களையும் பறைசாற்றும். அவன் கருணைக்காக நாம் ஏங்க வேண்டும். நான் உன் அடிமை, நீயே எனக்குப் புகலிடம் என்று அண்டி வருபவர்கள் யாராயிருப்பினும் அவர்களை நான் கைவிடுவதில்லை என்று இராமாவதாரத்தில் இராமபிரான் வாக்குறுதி கொடுக்கிறான். இது தெய்வத்தின் குரல். நாம் செய்கின்ற குற்றங்களுக்கும் பாவங்களுக்கும் உண்டான தண்டனை நாம் இந்தப் பிறவியிலோ, இல்லை, மறுபிறவியிலோ அடைந்தே தீர வேண்டும். அதனைக் குறைக்கும் சக்தி பகவானின் கையில்தான் இருக்கிறது. அவனுடைய கருணையால் யாவும் தீயிலிட்ட பஞ்சாகப் பொசுங்கிப் போகும். இறைவனை நம்பியவர்களுக்கு என்றும் பரிகாரம் உண்டு இதையே ஆண்டாள் தன் பாசுரத்தில், போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் என்கிறாள்.
வைணவ சாம்பிரதாயப்படி இறைவனை ஐந்து மார்க்கங்களில் வழிபடலாம். பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சா ரூபம் என்பன அவை. ஐம்புலன்களுக்கெட்டாத அப்பால் உள்ளது பரம். இதனை நாம் மனதில் உருவகப் படுத்த முடியாது. எனவே பரம் பொருளை அருவமாக வழிபட்டு மேனிலை அடைவது என்பது அவ்வளவு சுலபமல்ல. வியூகம் என்பது இவ்வுலகம் படைக்கத் தோன்றியது. விபவ என்பது அவன் அவ்வப்போது எடுத்த அவதாரங்கள். இறைவன் அந்தர்யாமியாக எல்லோருடைய இதயத்திலும் குடி கொண்டுள்ளான். ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர் ஜுன திஷ்டதி! என்கிறான் கண்ணன் கீதையில் (18/61) ஈச்வரன் எல்லா உயிரினங்களின் இதயத்துள்ளும் சாட்சியாக இருக்கிறான்.
அந்தர்யாமியான பரம்பொருளை நினைப்பதும் அவ்வளவு சுலபமல்ல. அர்ச்சாரூபம் என்பது நாம் கோயில்களில் பார்க்கும் சிலாரூபங்களே. ஆகவே கோயில் சென்று தொழுது இறைபணியில் பகவத் சேவையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது சுலபமே. ரூபம் என்றும் மனதில் நிலைத்து நிற்கக் கூடியது. எனவே விக்ரஹ ஆராதனை நாம் எளிதாக செய்யக் கூடிய பகவத் கைங்கர்யமாகும். இறைவனின் தெய்வீக குணங்களைப் புகழ்ந்து பாடவும், நாம் ஜெபம் செய்யவும், அவன் கருணையை இரந்து வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்ளவும் கோயில் வழிபாடு மிகவும் முக்கியமானது.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர் வாக்கு.
ஆன்மிகப் பாதையில் கோயில் வழிபாடு ஒரு முக்கிய அங்கம். அதனை சாதகன் தவற விடக் கூடாது. |
|
|
|