|
அன்பே தெய்வம் என்பது இவ்வுலகில் மத வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொண்ட ஓர் உண்மையாகும். அன்பு என்பது என்ன? அது எவ்வாறு நமக்கு அருள் அளிக்கிறது. என்பதை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படுகிறது. அன்பு என்பது நமக்கு தொடர்புடையவர்களிடம் நாம் காட்டும் மன நெகிழ்ச்சியாகும். நம் உறவினர், நண்பர்கள், மற்றுமுள்ள ஏனையவர்களிடம் நாம் கொள்வது அன்பாகும். இவ்வன்பு தம்மோடுயாதொரு தொடர்பும் இல்லாத அயலாரிடமும், ஜீவஜந்துக்களிடமும் காட்டும் போது அருளாக மாறுகின்றது. அருள் என்பது அன்பிலிருந்தே பிறக்கின்றது என்பதனையே, அருள் என்னும் அன்பின் குழவி என்கிறார் பொய்யா மொழியார். எனவே அன்புடன் இருப்போம் என்கிற உறுதி மொழியை நாம் அனைவரும் எடுத்துக் கொண்டால் குடும்பத்திலும், நாட்டிலும் நல்வாழ்வு தலையெடுக்கும் என்பது திண்ணம். பொறுமையும் சாந்தமும் எங்கும் நிறைந்திருக்கும்.
அன்பே தன்னல மறுப்பையும், பிறர் நலவிருப்பையும் தரவல்லது என்பதையே,
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையவார் என்றும் உரியர் பிறர்க்கு
என்ற குறள் மூலம் நன்கு விளங்கும். பிறரிடம் தயையுடன் இருப்பதை செய் முறையில் காட்டுவதே அன்பின் வெளிப்பாடு. இதற்கு நம் சொல், செயல், பொருள் மற்றும் அறிவு ஆகியவற்றை மற்றவர்க்கு உபகாரம் ஆகும்படி அளித்து (பரோபகாரம் இதம் சரீரம்) அவர்களுடைய கஷ்ட நஷ்ட காலங்களில் பயன்படச் செய்வதேயாகும். இச்செயல் நமக்கு இம்மையிலும், மறுமையிலும் பேரானந்த பெருவாழ்வை தரும் என்பது திண்ணம். மனித உடல் எடுத்த வாழ்வின் பிரயோஜனமே அன்புடன் வாழ்வதேயாகும். இதையே,
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு
என வள்ளுவர் உரைக்கின்றார். அன்பு அழியாதது. அந்த அன்பின் வடிவே ஆண்டவன். இறைவனிடத்தில் இருக்கின்ற அன்பின் ஒரு பகுதி நம்மிடம் நிலைத்துவிட்டால் உறவினர், நண்பர்கள் மற்றும் பிராணிகளிடமிருந்து ஏற்படும் தவறுகளினாலும் வெறுப்பு அடையாமல் செய்து விடுகிறது. இந்த அன்பு உலகெங்கும் நிறைந்து வழிவது தான் உலகமக்கள் மனித தன்மையை பெற்றதன் பயனாகும். இந்த அன்பு வளர்வதற்கு முதன் முதலில் நாம் செய்ய வேண்டிய சிறிய தியாகம், (கொஞ்சமாக) நமக்கு வரும் கோபங்களையும் முரட்டு பிடிவாதங்களையும் விட பழகுதல், சகிப்புத் தன்மையை வரவழைத்துக் கொள்ளுதல், தேவைக்கு மேல் பொருள்களை விரும்பாதிருத்தல், பொய் பேசாது இருத்தல், கடவுளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தல், பெரியோரிடம் மரியாதையும், யாரையும் எதிர்த்து சவால்விட்டு பேசாதிருத்தல், உடல் வளர்ச்சியை மட்டும் எண்ணாமல் உயிரின் மேன்மையை அறிய தியானத்தில் ஈடுபடுதல், தேவையின்றி பேசாதிருத்தல் போன்ற குணங்களை கைக்கொள்ளுதலே ஆகும்.
அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே
என்று வள்ளலாரின் அருட்பாவும், அன்பு வடிவான இறைவனை தன் மனத்தின் இருத்தி மனம் உருகி, கண்ணீர் மல்கியதின் வெளிப்பாடே மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஆகும். அன்பும் அறமும் இணைந்து ஓரிடத்தில் செயல்பட்டால் அங்கு நல்ல பண்பும் பயனும் ஏற்படுகின்றது. என்பதை,
அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
என்ற திருக்குறள் நன்கு விளக்கும். அன்பு, வீடுபோற்றை அளிக்கின்றது. அன்பானது ஆண்டவனை இறங்க வைக்கிறது. நமக்கு அருள் அளிக்கிறது. குகன் ராமபிரான் மீது செலுத்திய அன்பால் அகம் மகிழ்ந்த இராமன் குகனுடன் சேர்த்து ஐவராவோம் என குகன் தன் சகோதரர்களில் ஒருவனாகவே சேர்த்துக் கொள்கிறார். அவதார புருஷனாகிய இராமபிரான் வேடுவன் குகனை சகோதரனாக ஏற்றுக் கொண்டது அன்பினால் என்பதை கம்பராமாயணம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது. ஆஞ்சநேயர் இராமனிடம் கொண்ட அன்பால் செய்த பணிவிடைகளால், உயர்ந்த பக்தர்களால் துதிக்கத் தக்கவராக திகழ்கிறார். ஈசனிடம் கொண்ட அன்பின் மிகுதியால் தன் கண்ணைப் பிடுங்கி அப்பி கண்ணப்பநாயனாராக திகழும் அன்பின் பெருமை பெரியபுராணம் நமக்கு உரைக்கின்றது. மேற்கூறியவர்களின் அன்புக்கு ஆண்டவன் மெச்சி அவர்கள் வீடு பேற்றைப் பெற்றதை அற நூல்கள் நமக்கு உறைக்கின்றன. அன்புள்ளம் உடையவரின் உடம்பே உயிர் தங்கியுள்ள உடம்பாகும். அன்பில்லாதவர் உடலில் உயிர் இருந்தும் அவ்வுடம்பு எலும்பு முதலியவற்றால் ஆகிய, தோல் போர்த்தப்பட்டவெறும் உயிரற்ற உடம்பே ஆகும் எனக் கூறும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
எனும் குறளின் பொருளுணர்ந்து சான்றோர்களின் சிந்தனையை துணைக் கொண்டு - அன்புடன் வாழ்ந்து உய்வோமாக. |
|
|
|