|
ராமதாசர் என்று பெயர் வைத்துக் கொண்டு கிருஷ்ண பக்தராகத் திகழ்ந்தார் துவாரகா ராமதாசர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம், ஏகாதசியன்று துவாரகைக்கு, 140 மைல் தொலைவு நடந்தே போய் துவாரகாநாதனுக்குத் துளசியை அர்ப்பித்து விட்டு வருவார். ஒருமுறை உடல் நோய்வாய்ப்பட்டதால் அவரால் நடக்க முடியவில்லை. துவாரகாநாதனே அவருடைய இல்லத்துக்கு வந்து விட்டார். துவாரகையில் கிருஷ்ணனின் விக்ரஹத்தைக் காணாமல் பக்தர்கள் நாடெங்கும் தேடினர். ராம தாசரின் இல்லத்தில் விக்ரஹத்தைக் கண்டனர். ஆனால், ராமதாசர் அதைத் தர மறுத்து அழுது புலம்புகிறார். கோயில் நிர்வாகிகள் தாசரின் ஏழ்மை நிலையைக் கண்டு, விக்ரஹத்தின் எடைக்கு எடை தங்கம் கொடுத்துவிட்டு, விக்ரஹத்தை வைத்துக் கொள்ளும்படி தாசரிடம் கூறுகின்றனர்.
துலாபாரம் தொடங்கியது. கண்ணனை எண்ணி கதறி அழுதபடி மனைவியையும் அழைத்துக் கொண்டு மூன்று முறை வலம் வந்து துளசியை மறுதட்டில் போடுகிறார் ராமதாசர். தட்டு உயர்ந்து சமநிலைக்கு வருகிறது. அவர்களும் கிருஷ்ண விக்ரஹத்தை அவரிடமே விட்டுச் செல்கிறார்கள். இன்றும் அவர் வாழ்ந்த தாக்கோர் என்ற ஊரில் சரத் பவுர்ணமியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி துவாரகாநாதனின் விக்ரஹத்தை இங்கே தரிசித்து மகிழ்கிறார்கள். |
|
|
|