|
பக்திப் பயணமாகவோ அல்லது ஏதாவது வேண்டுதலோடோ ஒரு கோயிலுக்குச் செல்லும்போது அந்தக் கோயில் பூட்டியிருந்தால் தெய்வகுத்தம் என்று நினைக்க வேண்டாம். குருவாயூர் கோயிலுக்கு சென்றால், அங்கே மஞ்சுளால் என்றொரு மரத்தைப் பார்க்கலாம். அது ஏதோ ஒரு அபூர்வப் பெயர் கொண்ட மரம் என்று நினைத்து விடாதீர்கள். சாதாரணமான ஆலமரம்தான் அது. பிறகு ஏன் அதற்கு அப்படி ஒரு பெயர்? மஞ்சுளா என்ற பக்தை குழந்தை கிருஷ்ணராக நினைத்து வழிபட்ட மரம் அது என்பதால், மஞ்சுளா ஆல். எதற்காக அந்த மரத்தை கண்ணனாக எண்ணினாள் மஞ்சுளா? குருவாயூரப்பனின் தீவிர பக்தையான மஞ்சுளா, தினமும் தன் கையாலேயே ஒரு மாலை கட்டி அவருக்கு அதை சாத்தச் செய்வாள். அதற்குப் பிறகுதான் உணவு, தூக்கம் எல்லாம்.
ஒருநாள் என்ன காரணத்தாலோ அவள் மாலையைக் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடுத்து முடித்து அவள் எடுத்து வருவதற்குள், கோயிலில் நடை சாத்திவிட்டார்கள். மாலையோடு வந்த மஞ்சுளா, சன்னதியை சாத்திவிட்டதைப் பார்த்து மாலைமாலையாகக் கண்ணீர் விட்டாள். அவளது நிலையைப் பார்த்து வருந்திய கோயில் நம்பூதிரி, அவளுக்கு ஒரு யோசனை சொன்னார். சன்னதியை சாத்திவிட்டதற்காக வருத்தப்படாதே. எங்கும் உள்ள குருவாயூரப்பன், இதோ இந்த மரத்தின் கீழ் நிற்பதாக நினைத்துக்கொள். இங்கே அந்த மாலையை சாத்திவிட்டுச் செல்! கண்டிப்பாக அவன் ஏற்றுக்கொள்வான்! ஆறுதலாக அவர் சொன்ன வார்த்தையை ஏற்றுக்கொண்டாள் மஞ்சுளா. அப்படியே செய்தாள். மறுநாள், கோயில் நடை திறந்தபோது குருவாயூரப்பன் கழுத்தில் அந்த மாலை இருப்பதைப் பார்த்தார்கள் எல்லோரும். மஞ்சுளாவின் பக்தியை உணர்த்துவதற்காக பகவான் நடத்திய நாடகமே அது என்று உணர்ந்தார்கள். அன்று முதல் அந்த ஆலமரத்தையும் கும்பிட ஆரம்பித்தார்கள்.
நீங்கள் கோயிலுக்குச் செல்லும் நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் நடை சாத்தியிருந்தால் உடனே, ஏதோ தெய்வ குற்றம் என்று நினைத்து வருந்துவதை விடுங்கள். உங்களுக்கு ஏதோ ஒரு நன்மை செய்வதற்காக தெய்வம் ஆடும் நாடகமாகக் கூட அது இருக்கலாம் என்று நினையுங்கள். நேரம் இருந்தால் காத்திருந்து கும்பிடுங்கள் அல்லது இருக்கும் இடத்தில் இருந்தே மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் கோரிக்கையை நிச்சயமாக அந்தக் கடவுள் ஏற்றுக்கொள்வார். நல்லதே செய்வார். |
|
|
|