|
“அன்பான சீடரே! இந்த தண்ணீரைப் பாருங்கள். நல்லவர்களின் மனம் போல, எவ்வளவு அழகாகவும், தெளிவாகவும் இருக்கிறது,” ராமபிரானின் புண்ணிய சரிதமான ராமாயணத்தை இயற்றும் முன், வால்மீகி மகரிஷி தன் சீடரான பரத்வாஜரிடம் சொன்ன வார்த்தை இது. ராமபிரான் தெளிந்த தண்ணீர் போல பரிசுத்தமானவர் என்பதை இவ்வாறு சுருங்கக் கூறினார் வால்மீகி. இதனால், பரத்வாஜரை ராமாயணத்திற்கு சாட்சியானவர் என்று சொல்வதுண்டு. பரத்வாஜர் பல மகரிஷிகளிடம் சீடராக இருந்து, அவர்களிடமிருந்து வேதங்கள், அதன் உட்பொருள் என சகல விஷயங்களையும் கற்றுத்தேர்ந்தார். கல்வியில் ஆர்வம் காரணமாக, தன்னை தாழ்த்திக் கொண்டு, தம்மை ஒத்த ரிஷிகளிடம் கூட சீடராகத் தொண்டாற்றினார். பரத் என்றால் தாங்குகிறவர், வாஜம் என்றால் வலிமை. வலிமையான தேகத்தை உடையவர் என்பதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. தேவகுருவான பிரகஸ்பதி, தன் சகோதரர் மனைவி மமதையுடன் கூடி குழந்தை பிறந்ததாக வரலாறு உண்டு. அதை வளர்க்கும் பொறுப்பை மமதையிடம் பிரகஸ்பதி ஒப்படைத்தார். அவளோ, பிரகஸ்பதி தான் குழந்தையை வளர்க்க வேண்டுமென்றாள்.
இந்த பிரச்னையில் குழந்தையை ஒரு தனியிடத்தில் விட்டுச் சென்று விட்டனர். குழந்தையில்லாத ஒரு தம்பதி அதை எடுத்து பரத்வாஜர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். இவரது பெயரை பர த்வாஜம் எனப் பிரித்தால் இருவருக்குப் பிறந்தவர் என்று பொருள் வரும். இவரே பிற்காலத்தில் சப்த ரிஷிகளில் ஒருவரானார். இவரது பிறப்பு இழிவான நிலையில் இருந்ததால் தான், நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே என்ற பழமொழியே உருவானதாகச் சொல்வர். நதிகள் பிறக்குமிடத்தை பார்ப்பதும் தவறு என்பர். பரத்வாஜர் வேதங்கள் மீது முழு ஈடுபாடு கொண்டவர். இதற்காக இந்திரனிடம் மூன்று முறை ஆயுள் நீட்டிப்பு பெற்று வேதம் கற்றார். நான்காவது முறையாகவும் ஆயுளை நீட்டித்துக்கொள்ள வேண்டினார். அப்போது இந்திரன், மூன்று மலைகளைக் காட்டி, அதிலிருந்து கைப்பிடியளவு மண் கொடுத்தான். அம்மலையின் அளவிற்கு வேதம் இருப்பதாகச் சொன்னவன், கைப்பிடி மண்ணளவிற்கே அவர் வேதம் கற்றிருப்பதாக தெரிவித்தான். இவ்வாறு வேதம் கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக பரத்வாஜர் திகழ்ந்தார்.
யஜுர் வேதத்திற்கு இவர் விளக்கம் எழுதியுள்ளார். பரத்வாஜர் ராமபிரான் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர். ராமர் காட்டிற்குச் சென்றபோது, அவரை அயோத்திக்கு மீண்டும் அழைத்து வர, அவரது தம்பி பரதன் சென்றான். அவனுடன் ராமபிரானை தங்கள் நாட்டிற்கு அழைத்து வருவதைக் குறிக்கோளாகக் கொண்டவர்களும் கிளம்பினர். வழியில் பரத்வாஜரின் ஆஸ்ரமத்தை பரதன் கண்டான். அவனையும், உடன் வந்தவர்களையும் உபசரித்தார் பரத்வாஜர். அவரது விருந்தை ஏற்றுக் கொண்ட அனைவரும் பரதனிடம், “நாங்கள் அயோத்திக்கும் வரவில்லை. தண்டகாரண்யத்திற்கும் செல்லவில்லை. நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுகிறோம்,” என்றனர். ராமபிரானை அழைத்து வரும் தங்களது தலையாய கடமையைக்கூட மறந்து, பரத்வாஜருடன் தங்கிவிடுவதாக கூறும் அளவிற்கு அவர்களை உபசரித்தவர் பரத்வாஜர். வனவாசம் முடிந்ததும் ராமன் அயோத்தி திரும்பினார். குறிப்பிட்ட காலத்திற்குள் நாடு திரும்பாவிட்டால் பரதன் உயிரை விட்டுவிடும் இக்கட்டான நிலையிலும், பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். தனக்காக பசி, துõக்கம் மறந்து உதவி செய்த வானர வீரர்களுக்கு, விருந்து கொடுக்க வேண்டுமென விரும்பிய ராமன், அதை பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் நிறைவேற்றி வைத்தார். |
|
|
|