|
கணபதி, விநாயகர் என்ற பற்பலப் பெயர்களில் அழைக்கப்படும் கணநாதன் முதல் கடவுளாக இந்த பாரத தேசத்தில் கொண்டாடப்படுகிறார். எந்த ஒரு செயலை செய்ய வேண்டுமெனில் அதை கணபதி பூஜையில் ஆரம்பிப்பது நடைமுறையில் உள்ள ஒன்றாகும். சிவபார்வதியின் மைந்தனே கணபதி. பார்வதி தேவி, தான் நீராட செல்லும் முன் கணபதியை காவலாக உட்கார வைத்துவிட்டு சென்றார். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானை உள்ளே செல்ல அனுமதிக்காததால் கணபதியின் தலையை துண்டித்து விடுகிறார் சிவபெருமான். பார்வதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, தேவகணங்களில் வடக்கு முகமாக யார் படுத்தியிருக்கிறார்? என்று சென்று தேடினார்கள். இறுதியில் ஓர் யானையின் சிரசை (தலை) கொண்டுவந்து கணபதிக்கு பொருத்தி திரும்ப உயிர்தெழும்படி செய்தனர்.
முன்னொரு காலத்தில் மூக்ஷிகாசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மிகவும் இன்னல்களை கொடுத்து வந்தான். அவனை அழிக்கும் பொறுப்பை கணபதிக்கு சிவபெருமான் அளித்தார். அந்த பொறுப்பை கணபதி நிறைவேற்றி, பலசாலியான, தொல்லைகள் தந்த அந்த அசுரனை வென்று. அவ்வசுரனின் வேண்டுகோளை ஏற்று மூக்ஷிகனை எலி வடிவில் தனது வாகனமாக ஏற்றார் கணபதி. நம்முடைய பாரத தேசத்தில் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்படும் ஓர் பூஜை கணபதி பூஜை. ஏழை- பணக்காரர், சிறியவர் - பெரியவர், ஆண்- பெண் பேதமின்றி அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஓர் பூஜையாகும். இந்த பூஜையை ஓர் விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகரை மண்ணினால் செய்து ஒரு நாளிலிருந்து ஒன்பது நாட்கள் வரை எவ்வளவு நாட்களாவது பூஜை செய்கிறார்கள்.
கணபதி பூஜை ஆவணி மாதம் சதூர்த்தி (பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ சதுர்தசி) அன்று கொண்டாடப்படுகிறது. அன்று மண்ணினால் செய்த கணபதியை நன்றாக அலங்காரம் செய்து, எருக்கம் மாலை அணிவித்து, 21 வகையான பத்ரி (இலைகளை) கொண்டு வந்து பூஜை செய்து, கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வர். கணபதிக்கு 21 என்ற எண் மிகவும் பிரியமானது. அதனால்தான் 21 வகையான இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். தங்களால் கணபதி வாங்க முடிய இயலவில்லையெனில் மஞ்சள் பொடியாலும் விநாயகரை செய்து பூஜை செய்யலாம். மஞ்சள் பொடியால் செய்தாலும், வெள்ளியினால் விக்ரஹித்திற்கு அபிஷேக ஆராதனை செய்தாலும் கணபதி வேறுபாடில்லாமல் கைஎடுத்து நமஸ்காரம் செய்யும் பக்தர்களுக்கு அருளை அள்ளி அள்ளிக் கொடுத்து காப்பாற்றுவார். |
|
|
|