|
ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய ஆதிசங்கரர், சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதிக்கு இறைவன் அருளால் கேரள மாநிலத்திலுள்ள காலடியில் பிறந்தார். அவர் பிறந்த சில காலத்திலேயே அவருடைய தந்தையார் காலமானார். சிறுவயதினிலே துறவு மேற்கொண்ட சங்கரர் தினமும் தனது துறவு நெறிக்கேற்ப பிக்ஷை எடுத்து, அவர்கள் அளிக்கும் உணவை உண்டு தனது இறைப்பணியைத் தொடர்ந்தார். அவ்வாறு ஒருநாள் ஓர் இல்லத்தின் முன்னர் நின்று பவதி பிக்ஷாந்தேஹி என மும்முறை கூறினார். அந்த இல்லத்திலிருந்து தன் ஏழ்மையை எண்ணி இறைவனிடம் முறையிட்டு கொண்டிருந்த ஒரு ஏழை பெண்மணி வெளியே வந்தாள். அவளுடைய கணவர் கல்வியில் சிறந்தவர். ஏழ்மையை விரட்ட அவர் பணி மீது வெளியே சென்றிருந்தார். வெளியே வந்த அப்பெண்மணி அங்கு நின்றிருந்த சங்கரரைப் பார்த்தவுடன் எம்பெருமானே தன் முன்நின்றிருப்பது போல் உணர்ந்தார். ஆனால் அவளிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள் ஏதும் இல்லை.
அந்த அம்மையார், நான் பாபம் செய்தவள். அதற்காக எம்பெருமானாக உள்ள நீங்கள் உணவு கேட்கும்போது தங்களுக்கு அளிக்க என்னிடம் உணவு ஏதுவும் இல்லையே என வருந்துகிறேன் என்றாள். அதற்கு சங்கரர், அன்னையே அதற்காக வருந்தாதீர். தங்களிடம் உணவு இல்லையென்றாலும் உணவுப்பொருட்கள் இருந்தாலும் பரவாயில்லை. அதையாவது அளியுங்கள் என்றார். அந்த பெண்மணி வீட்டிற்குள் சென்று பார்த்தார். வெகு நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்த நெல்லிக்கனி வாடி வதங்கியிருந்தது. அதை எடுத்து தயக்கத்துடன் சங்கரரிடம் வந்து அளித்தாள். அங்கு ஏற்றுக்கொண்ட சங்கரர், அன்னையே இந்த வாடிய நெல்லிக்கனியை தாங்கள் அன்புடன் அளித்ததால் உங்களுக்கு செல்வம் அளிக்க அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மியை வேண்டுகிறேன் என்று கூறி, கனகதாரா ஸ்தோத்திரம் கூறி மனமுருகி மஹாலக்ஷ்மியை வேண்டினார்.
அங்கம் ஹரே: புலக பூஷண மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகலாபரணம் தமாலம்.
குணாதிகா குருதரபாக்யபாகிற: பவந்தி தே புவி புதபாவிதாசயா:
என்று அந்த பெண்மணியின் தரித்திர நிலை நீங்கும்படி செய்யவேண்டுமென ப்ரார்த்தித்தார்.
அந்த சின்னஞ்சிறு குழந்தையின் வேண்டுதலை ஏற்று, லோகமாதாவான ஸ்ரீமஹாலக்ஷ்மி சங்கரர் முன் தோன்றினார். வறுமையில் வாடும் குசேலனுக்கு அவல் கொடுத்த காரணத்தினால் கிருஷ்ணர் சர்வ சம்பத்தினையும் வழங்கினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதுபோல் மஹாலக்ஷ்மி தாயாரும் சங்கரருடைய வேண்டுதலை ஏற்று, வாடிய நெல்லிக்கனி வழங்கிய அந்த ஏழை பெண்மணியின் வறுமையை போக்கும் நோக்குக்குடன் கனகதாரை (பொன்மழை) தங்க நெல்லிக்கனிகளை மழைப்போல பொழியச் செய்தார்.
அதுமட்டுமின்றி இந்த சுலோகத்தினை படிப்பவர்கள் அனைவருக்கும் நல்லருளும், செல்வ செழிப்பும் கிடைக்கும். இந்த ஸ்லோகத்தினை தினமும் படிப்பதால் வறுமை நம்மை அண்டாது. செல்வ செழிப்பும் நம்மை விட்டு நீங்காது என்பது உறுதி. இதை பக்தியுடன் பாராயணம் செய்பவருக்கு மஹாலக்ஷ்மியின் அனுக்ரஹத்தால் ஸகல ஸம்பத்துக்களுமுண்டாகும். |
|
|
|