|
வர்த்தமான மகாவீரர் துறவறம் மேற்கொண்ட சமயம், தேவேந்திரன் அவர் முன்பாகத் தோன்றி, தெய்விக ஆடையொன்றை அவருக்கு அளித்தான். சோமதத்தன் என்பவன் யாசித்து வர, அவனுக்குப் பாதி ஆடையினைக் கொடுத்து அனுப்பினார் வர்த்தமானர். இந்திரனால் வழங்கப்பட்ட அந்த ஆடை விலைமதிப்பற்றது என்பதைத் தெரிந்து கொண்ட சோமதத்தன், வர்த்தமானர் தவ நிலையில் இருக்கும் சமயம், மீதி ஆடையை அவரிடமிருந்து திருடிச் சென்றுவிட்டான். நிஷ்டை கலைந்து கண் விழித்த வர்த்தமானர், ஆடை களவாடப்பட்டிருப்பதை உணர்ந்தார். ஆரம்பத்திலேயே சோமதத்தனுக்கு முழு ஆடையையுமே கொடுத்திருந்தால், அவன் திருடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதே என்று எண்ணி, அவனது திருட்டிற்கு நாம் காரணமாகி விட்டோமே என்று வருந்தினார். இனி மற்றவர்கள் மனதில் களவாடும் ஆசையைத் தூண்டும் எந்தப் பொருளும் தன்னிடம் இருத்தல் கூடாது என்று தீர்மானித்து, அன்று முதல் திசைகளையே ஆடையாகக் கருதி, திகம்பரராகவே வாழ்ந்தார் வர்த்தமான மகாவீரர். |
|
|
|