|
நமக்கு அ ஆ கற்றுத்தந்த குருமார்களை நாம் என்றும் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த நினைவு நம்மை நன்றாக வாழ வைக்கும். தத்தாத்ரேய முனிவரிடம் கார்த்தவீர்யார்ஜுனன் என்ற மாணவன் படித்து வந்தான். ஒருநாள் குரு உறங்கச் சென்றார். கார்த்தவீர்யாஜுனன் அவரது காலடிகளைப் பிடித்து விட்டான். அவனது இதமான பிடிப்பால், குரு நன்றாக உறங்கி விட்டார். அவரது திருவடிகளில் சூக்குமத்தீ (கண்ணுக்கு தெரியாத நெருப்பு) என்னும் சக்தி இருந்தது. அது வீர்யாஜுனனின் கைகளை எரித்து விட்டது. ஆனாலும் அசராத அவன், முனிவரின் துõக்கம் கெட்டு விடக்கூடாதே என்பதற்காக, தன் உடலைக் கொண்டு அவரது கால்களை அமுக்கி விட்டான். விழித்தெழுந்த முனிவர் தன் சீடனின் கைகள் எரிந்து போனது கண்டு வருந்தினார். அவனது குரு பக்தியை எண்ணி வியந்து, “வீர்யார்ஜுனா..எனக்கு சேவை செய்ததால் உன் இரண்டு கைகள் போனது பற்றி கவலைப்படாதே. உனக்கு சக்தி வாய்ந்த ஆயிரம் கைகளைத் தருகிறேன். அவற்றைக் கொண்டு மக்களுக்கு பல நன்மைகள் செய்து வாழ்வாயாக,” என வாழ்த்தினார். கார்த்தவீர்யாஜுனனும் ஆயிரம் கைகளுடன் வாழ்ந்தான். இந்தக் கைகளைக் கொண்டு, சக்தி வாய்ந்த அசுரனான ராவணனையே ஒடுக்கியவன் இவன். குரு பக்தி தந்த பெருமையைப் பார்த்தீர்களா!
|
|
|
|