|
ஏகலைவன் வேடர்களின் தலைவன். தன் மக்களுக்கு உணவூட்ட, குல தர்மப்படி காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்தான். ஒருமுறை, பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும், அவர்களின் குருவான துரோணர் காட்டுக்குள் வில்வித்தை அளிப்பதைப் பார்த்தான். தனக்கும் வித்தை கற்றுத்தரும்படி அவரிடம் வேண்டினான்.“ஏகலைவா! இவர்கள் நாடாளப் போகிறவர்கள். இவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருப்பர். அப்போது தங்களை மட்டுமின்றி, நாட்டு மக்களையும் பாதுகாக்க இவர்களுக்கு வில்வித்தை அவசியம். ஆனால் வயிற்றுக்காக மிருகங்களை வேட்டையாடும் உனக்கு இதை கற்றுக் கொடுத்தால் அவற்றிற்கு மிக அதிகமாகத் துன்பம் தருவாய். உணவுக்காகவோ அல்லது விலங்குகள் உன்னைத் துன்புறுத்த வரும்போதோ மட்டும் தான் நீ வில்லெடுக்க வேண்டும். வேடனான உன்னால் அப்படியிருக்க முடியாது,” என்று சொல்லி மறுத்து விட்டார். ஆனாலும், அவர் பாண்டவ, கவுரவர்களுக்கு வில்பயிற்சி கொடுப்பதை மறைந்திருந்து கவனித்த ஏகலைவன், துரோணரை தன் மானசீக குருவாக ஏற்று, தானாகவே வில் வித்தையைக் கற்றுக் கொண்டான்.
அதில் ஒன்று தான் மிருகங்களின் வாயைக் கட்டும் பயிற்சி. இந்த பயிற்சி தனக்கு மட்டும் தான் தெரியுமென அர்ஜுனன் இறுமாந்திருந்தான். ஆனால், அர்ஜுனன் ஒருமுறை காட்டிற்குள் ஒரு நாயுடன் திரிந்த போது, அதன் சப்தத்தைக் கேட்டு, துõரத்திலிருந்தே வில்லெறிந்து அதன் வாயைக் கட்டிவிட்டான் ஏகலைவன். ஆச்சரியமும் பொறாமையும் கொண்ட அர்ஜுனன், துரோணரிடம் இதுபற்றி சொல்ல, துரோணர் ஏகலைவனைத் தேடி வந்து, “இந்தக் கலையை எப்படி கற்றாய்?” என்று கேட்டார். அவன் மறைந்திருந்து கற்ற விஷயத்தை மறைக்காமல் சொல்லவே, “அப்படியானால் குருதட்சணையாக உன் கட்டைவிரலைக் கொடு,” எனக் கேட்டார். அப்போது ஏகலைவன் கண்மூடி கிருஷ்ண பகவானைத் தியானித்தான். கிருஷ்ணன் அவன் மனதில் தோன்றி விரலைக் கொடுத்து விடும்படி கூறினார். அவனும் சற்றும் யோசிக்காமல் கொடுத்துவிட்டான். தர்மம் காப்பாற்றப்பட பிற்காலத்தில் குருக்ஷேத்ர யுத்தம் வரப்போவது கண்ணனுக்குத் தெரியும். அப்போது தர்மத்தைக் காக்கும் தலைவனாக அர்ஜுனன் இருப்பான்.
ஏகலைவனுக்கு அர்ஜுனனுக்கு தெரிந்த கலைகளெல்லாம் தெரிந்திருப்பதால், அவன் தன் குரு துரோணர் பக்கமே இருந்திருப்பான். அது கவுரவர்களுக்கு சாதகமாகிவிடும். ஏனெனில், துரோணர் கவுரவர் பக்கம் இருந்தார். அர்ஜுனனை விட சிறந்த வில்லாளியான ஏகலைவன், அவனைக் கொன்று விடுவான். உலகத்தில் தர்மம் செத்து விடும். எனவே தான், கண்ணன் ஏகலைவனை அப்போதே தடுத்து விட்டார். ஆனாலும் ஆசிரியர் சொல்லையும், ஆண்டவன் சொல்லையும் கேட்ட அவனுடைய புகழ் இப்போதும் நிலைத்து நிற்கிறது. குரு சொல்லுக்கு தலை வணங்கிய கோமான் யார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டால், நமது நினைவில் முதலில் வருபவன் ஏகலைவன் தான். அது மட்டுமல்ல! பிற்காலத்தில் தான் செய்த செயலுக்காக, கிருஷ்ண பரமாத்மா, ஏகலைவனின் மகன் மூலமாகவே மரண தண்டனையையும் அனுபவித்து விட்டார். ஆம்... ஏகலைவனின் மகன் ஜரன் என்பவன், கிருஷ்ணரின் கால் கட்டைவிரல் மீது அம்பெய்து அவரைக் கொன்றான். கடவுளே மனிதனாகப் பிறந்தாலும், இறப்பைச் சந்தித்தாக வேண்டும் என்ற அடிப்படையில், கிருஷ்ணர் இந்த தண்டனையை ஏற்றுக் கொண்டார். சரஸ்வதி பூஜை நன்னாளில், ஆசிரியர்களின் சொல் கேட்டு ஏகலைவன் போல் உயர்ந்த ஸ்தானத்தை அடைய மாணவர்கள் உறுதியெடுக்க வேண்டும்... புரிகிறதா மாணவர்களே!
|
|
|
|