|
கல்விக்குரிய நன்னாள் விஜயதசமி. படிப்பதே ஒழுக்கத்தை கடைபிடிக்கத் தான். ஒழுக்கம் தவறினால் என்னாகும் என்பதற்கு இந்தக் கதை உதாரணம். ஒரு நாட்டில் கொடியவன் ஒருவன் இருந்தான். அவன் உயரம் குறைந்தவன். அவன் செய்த அட்டகாசத்தால் துன்பமடைந்த மக்கள் அரசனிடம் புகார் கூறினர். அரசனும் அவனை அழிக்கப் புறப்பட்டான். ஆனால் அவன் மன்னனிடம், “இவ்வளவு குட்டையாக இருந்து கொண்டு என்னால் என்ன செய்து விட முடியும்? மக்கள் என்மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள்,” என்று காலில் விழுந்து கெஞ்சினான். அவன் சொல்வதில் உண்மை இருக்கலாம் என நினைத்த அரசன் இரக்கப்பட்டு, ‘இந்த குள்ளனா அட்டகாசம் செய்திருப்பான்... மக்கள் சொல்வதை நம்ப முடியவில்லையே! எதற்கும் விசாரணை நடத்திய பின் அவன் மீது நடவடிக்கை எடுக்கலாம்’ என விட்டு விட்டான். இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர்கள் மன்னனிடம்,“மன்னா! நீங்கள் கண்டிப்பாக அவனைத் தண்டித்தாக வேண்டும்.
அவனை வளர விட்டால் ஆபத்து தான்!” என்று அறிவுரை சொன்னார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே மன்னன் அவனைக் கொல்ல புறப்பட்டான். அப்போது அவன் சற்று வளர்ந்திருந்தான். இருந்தாலும் அவனைக் கொல்ல மன்னனுக்கு மனமில்லை. இந்த உருவத்தைக் கொண்டு யாருக்கும் எந்த ஆபத்தையும் விளைவிக்க முடியாது என்றே உள்மனம் சொன்னது. அவன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். இதையறிந்த மன்னனின் தாய்,“மகனே! மக்களுக்கு துன்பம் இழைப்பவர்களை உருவத்தைக் கொண்டு கணிக்கக்கூடாது. உருவத்தை விட மனம் தான் பெரியது. ஒருவன் குள்ளனோ, வளர்ந்தவனோ அவனது உருவம் எந்த பாதிப்பையும் உருவாக்காது. அவனது மனதில் இருக்கும் தீயசிந்தனைகளோ பெரும் பாதிப்பை உண்டாக்கி விடும். ராஜமாதா என்கிற முறையிலே உனக்கு உத்தரவிடுகிறேன். அவனைக் கொல்,” என்றாள். மன்னனும் ஆவேசத்துடன் அங்கு சென்றான். ஆனால் அவனது அப்பாவித்தனமான முகமும் உருவமும் மன்னனை ஏதும் செய்ய விடாமல் தடுத்து விட்டன. இப்படி பலரது அறிவுரையின் பேரில் அவன் மாறி மாறி சென்றான்.
ஒவ்வொரு முறையும் அவன் செல்லும் போது அவனது உயரம் ஓரளவு கூடிக்கொண்டே இருந்தது. ஒருநாள் மக்கள் மன்னனையே எதிர்த்துக் குரல் கொடுத்தனர். “மன்னா! நீங்களே அவனைக் கொல்கிறீர்களா! அல்லது சட்டத்தை நாங்களே கையில் எடுக்கட்டுமா!” என்று கோரசாகக் கேட்டனர். உப்பரிகையில் நின்ற மன்னன் வேறு வழியின்றி அந்த மனிதன் இருக்குமிடத்தை அடைந்தான். இப்போது அவன் நன்றாக வளர்ந்திருந்தான். “மன்னா! முடிந்தால் என் மீது கை வைத்துப் பார். உன்னால் என்னை ஏதும் செய்ய முடியாது. உன்னை விட நானே வலிமை மிக்கவன், வா போருக்கு...” என்று அறைகூவல் விடுத்தான். கோபமடைந்த மன்னன், அவனுடன் மிகக் கடுமையாகப் போராடினான். அவனை அழிக்க மிக சிரமமாக இருந்தது. வேறு வழியின்றி தன் படையில் பெரும்பகுதியை அவன் மீது ஏவியே அவனைக் கொல்ல வேண்டியதாயிற்று. இதுபோல் தான் கெட்ட வழக்கங்களும்...அவற்றை மாணவப் பருவத்திலேயே அதாவது முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லாவிட்டால் அது வளர்ந்து நமக்கே எதிரியாகி விடும். கல்விக்குரிய விஜயதசமி நன்னாளில் கிடைத்த இந்த அறிவுக்கதையை எல்லாருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
|
|
|
|