|
சிலர் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள். புரிகிறதோ, இல்லையோ...அந்தப் படிப்பு ஏதாவது ஒரு காலத்தில் உதவும். ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்கச் செல்வார். அதனால் வீட்டுக்கு வர தாமதமானது. ஒரு நாள் அவரது மனைவி, “அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக் கிடக்கு? தினமும் அங்க போயிட்டு வாரீங்களே! உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க? என்று கேட்டாள். அதற்கு அந்த மனிதர்,“ஒன்றுமே புரியவில்லை. ஆனா, போய் கேட்டு வருவது நன்றாகவே இருக்கு என்றார். உடனே அவரது மனைவி, “முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொண்டு வாங்க, என்றார். அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்தார். அது அதில் தேங்கவில்லை. உடனே அந்தப் பெண், “ பார்த்தீங்களா! நீங்க உபன்யாசம் கேட்கப்போன லட்சணமும் இதோ.. இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீர் மாதிரி தான், எதுக்கும் பிரயோஜனம் இல்லாம இருக்கு, என்று கேலியாகச் சொன்னாள். அதற்கு அந்த மனிதர் சொன்ன பதில், “நீ சொல்வது சரிதான். சல்லடையில் தண்ணீரை வேண்டுமானால் நிரப்ப முடியாம போகலாம். ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு...சுத்தமாயிடுச்சு. அதுபோல, உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம். ஆனா என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப்படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது’, என்றார். இதுபோல் கேட்பதோ, படிப்பதோ வீண் போகாது. ஏதோ ஒரு வகையில் அது நன்மையைத் தரும்.
|
|
|
|