|
அகாசுரன் வதம் முடிந்து கண்ணன் தனது நண்பர்களுடன் யமுனைக் கரை சென்றான். எல்லோரும் வாங்க சாப்பிடலாம் என்றான். அவர்கள் மகிழ மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒருவன், கண்ணா, கன்றுக்குட்டி ஒன்றையும் காணோமே என்றான். எழுந்த கண்ணன் சரி, நான் போய்ப் பார்க்கிறேன் என்றான். ஒரு கன்றுக் குட்டிகூட அவனுக்குத் தென்படவில்லை. அதிசயமாக இருக்கிறதே! இதென்ன மாயம் என எண்ணியபடி, மகிழ மரத்தடிக்குத் திரும்பினான். அங்கும் ஒருவரையும் காணவில்லை. ஏதோ சூது நடந்திருக்கிறது என அவனுக்குத் தெரிந்தது. அந்தி நேரம். கன்றுகளோ, சிறுவர்களோ இல்லாமல் வீடு திரும்பினால் விபரீதம் ஆகிவிடும் யோசித்தான். இது நிச்சயம் தேவர்களின் செயலே. தம்மை யாரோ சோதிக்கிறார்கள் என உணர்ந்தான்! யாருக்கும் இது தெரியக்கூடாது என எண்ணி, தன்னையே சிறுவர்களாகவும், கன்றுக்குட்டிகளாகவும் மாற்றிக் கொண்டான். அன்று வழக்கம் போல் எல்லா ஆநிரைகளும், சிறுவர்களும் தத்தம் வீடு திரும்பினர். வருஷம் ஒன்று ஓடிவிட்டது. இது பிரம்மனின் செயல் எனக் கண்டுகொண்டான் கண்ணன்.
அரக்கரை, ஒரு சிறுவன் எவ்வாறு வதைக்கிறான் என ஆச்சரியப்பட்ட பிரம்மா பிருந்தாவனம் வந்தார். அப்போதுதான் அகாசுரன் என்ற அரக்கன் பாம்பாக மாறி கண்ணனை விழுங்கியதும், கண்ணன் அவனைக் கொன்ற அற்புதமும் நிகழ்ந்தது. இவனா இதைச் செய்தவன்? இவன் யார்? என்பதைச் சோதிக்க எண்ணிய பிரம்மா ஆநிரைகளையும் சிறுவர்களையும் கடத்தி பிரம்மலோகத்தில் ஒரு குகையில் தூக்க நிலையில் ஒருகணம் வைத்தார். பின்னர், கண்ணன் இப்போது என்ன செய்கிறான் என்று கண்காணிக்க பிருந்தாவனம் வந்தார். அங்கோ கண்ணனுடன், தான் கடத்திய சிறுவர்கள் மற்றும் கன்றுக் குட்டிகள் அனைத்தும் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு திகைத்தார். கண்ணன் உண்மையிலேயே யார் என்று பக்தியுடன் கண் மூடித் திறந்தார். எதிரே பசு, கன்றுகள், சிறுவர்கள், மரம், செடி, கொடிகள் மற்றும் மூவுலகமே தோன்றியது! அதில் எத்தனையோ பிரம்மாக்கள், சிவன்கள், இந்திராதிதேவர்கள் என தன்னையும் சேர்த்து விஷ்ணு மயமாகவே கண்டு பக்தியில் அதிர்ந்தார். தனது சிறு மாயை, விஷ்ணுவின் முன் தூசு என்பதை உணர்ந்தார். படைக்கும் கடவுளையும், சம்ஹாரமூர்த்தியையும், காக்கும் தொழிலில் ஈடுபடும்போது, மகாவிஷ்ணுவே படைப்பையும் அழிப்பையும் சேர்த்துப் புரிய தேவையாகிறது என்று உணர்வதுதான் சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்பதன் தாத்பர்யம். |
|
|
|