|
ஒருமுறை புலவர்களிடையே உலகிலேயே யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. உலகம் தான் பெரியது, நாடாளும் மன்னனே பெரியவன், கடவுளே பெரியவர்...என்று ஆளுக்கொன்றாக சொன்னார்கள். அப்போது அவ்வையார் அங்கு வந்தார். அவர் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். “புலவர்களே! நீங்கள் சொல்வது போல உலகம் பெரியது தான். ஆனால், அந்த உலகத்தையே படைத்ததால் பிரம்மா பெரியவராகிறார். அதே நேரம் அந்த பிரம்மா, திருமாலின் தொப்புள் கொடியில் பிறந்தவர். இதனால் திருமால் பெரியவர் ஆகிறார். அந்த திருமாலை தாங்குவது கடல், எனவே அவரை விட கடல் பெரியது. அந்தக் கடலையே குடித்து ஏப்பம் விட்டவர் அகத்திய மாமுனி. எனவே கடலை விட அந்த மகரிஷி உயர்ந்தவராகிறார். அகத்தியர் ஒரு கும்பத்தில் இருந்து பிறந்ததால் கும்பமுனி என்ற பெயர் பெற்றவர். எனவே சக்தி மிக்க அவரைப் பெற்ற கும்பமே பெரிதாகிறது. அந்த கும்பம் பூமியில் இருந்து பிறந்தது. அதை ஆதிசேஷன் என்னும் நாகம் தாங்குகிறது. எனவே கும்பத்தை விட ஆதிசேஷன் பெரிதாகிறது. ஆதிசேஷனை அன்னை பார்வதி தன் விரலில் மோதிரம் போல் சுற்றியிருக்கிறாள். எனவே ஆதிசேஷனை விட பார்வதி பெரியவள் ஆகிவிட்டாள். அந்த பார்வதிக்கே மணாளன் சிவன். எனவே சிவன் பெரியவர் ஆகிறார். அந்த சிவனை தன் உள்ளத்துக்குள் அடக்கி வைத்து வணங்குகிறான் பக்தன். எனவே உலகிலேயே பெரியவன் பக்தன் தான். இதனால் தான் ‘தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே’ என்று பாடியிருக்கிறேன்,” என்றார்.
|
|
|
|