|
ஒரு முருகபக்தர் தினமும் தன் வீட்டில் வைத்து திருப்புகழ் பாடுவார். பக்கத்து வீட்டுக்காரனுக்கு இவர் இப்படி பாடுகிறார், நமக்கு கல்வியறிவு கூட இல்லையே என்று பொறாமை...எப்படியாவது அவரைப் பாடவிடாமல் தடுக்க முடிவு செய்தான். ஒரு விலைமாதுவை அணுகி, “அவரது வீட்டுக்குப் போய் எப்படியாவது அவரை மயக்கி, பக்தி மார்க்கத்தில் இருந்து மாற்றி விடு. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்,” என்று சொல்லி அனுப்பி வைத்தான். அவளுக்கென்ன! பணம் கிடைக்கிறதே, பக்தர் வீட்டுக்கு போனாள். அப்போதும் பக்தர் முருகனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார். அவள் உள்ளே வந்ததும், சைகை செய்து அமரச் சொன்னார். அவர் பாடி முடிக்கவும், அவரை நெருங்கிய அந்தப்பெண் மயக்குவதற்குரிய எல்லா வித்தைகளையும் செய்து பார்த்தார். அவரோ அவளிடம், “அம்மையே! உன்னை என் முருகனின் தாயான பார்வதிதேவியாகவே பார்க்கிறேன். உலகில் பேரின்பம் என்பது திருப்புகழை பாடுவது மட்டுமே. வேறு எதிலும் எனக்கு நாட்டமில்லை,” என சொல்லி விட்டார். அவளும் தொடர்ச்சியாக பத்துநாட்கள் வரை வந்து அவரை எப்படியும் மயக்கி விட முயற்சித்தாள். முடியாமல் போகவே, பெண்ணின்பத்தை விட, அப்படி என்ன தான் அந்தப் பாடல்களில் பேரின்பம் இருக்கிறது என படித்துப் பார்த்தாள். படிக்கப் படிக்க அதிலேயே ஆழ்ந்து போனாள். “என்ன பாவம் செய்தோமோ! இப்படி ஒரு இழிதொழிலை இத்தனை நாளும் செய்து விட்டேன். முருகா! என்னை மன்னித்து ஆட்கொள். இனி உன் திருப்புகழைப் பாடி, உன் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவேன். கேடான தொழில் செய்த என்னையும் ஏற்று அருள் செய்,” என்றாள். அன்று முதல் முருகனின் பக்தையாகி நல்வாழ்வு வாழத் தொடங்கினாள். |
|
|
|