|
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தியானத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, மெதுமெதுவாக மனதை புத்தியினாலும் உறுதியான எண்ணத்தினாலும் உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு மனதைப் பரம்பொருளில் நிலைநிறுத்திய பிறகு, வேறு எதையும் பற்றி எண்ணக் கூடாது என்ற கருத்தைக் கூறியருளினார்.
யதோ யதோ நிஸ்சரதி மநஸ்சஞ்சலமஸ்திரம் ததஸ்ததோ நியம்யதத் ஆத்மந்யேவ வஸம் நயேத் (ஸ்ரீமத் பகவத்கீதை 6-26)
அலைபாயும் இயல்போடு, நிலையற்ற தன்மையுடைய மனம் எந்தெந்தப் பொருட்களை நோக்கி வெளியே செல்கிறதோ, அவற்றிலிருந்து மனதை மீட்டெடுத்து, தன்வசப்படுத்தி, பரம் பொருள் தத்துவத்திலேயே வைக்கவேண்டும்.
வேதாந்த சாஸ்த்ரங்களைக் கற்பது என்பது மிகுந்த ஒருமுகப் பாட்டுடன் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயிற்சியாகும். குருநாதர், நீ தூய உணர்வாக இருக்கிறாய் என்று உபதேசிக்கும்பொழுது, அதனை நான் தூய உணர்வாக இருக்கிறேன் என்று உணர்ந்து புரிந்துகொள்வதற்கு மிகுந்த கவனமும் விழிப்புணர்வும் தேவை. மனமானது, சாஸ்த்ரத்திலேயே ஊறியிருந்தால்தான், இந்தக் கல்வியானது உரிய பயனைத் தரும்.
சிரத்தையுடன் சாஸ்த்ரத்தைக் கேட்டலே தியானம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நிமிர்ந்து உரிய ஆஸனத்தில் அமர்தல் மட்டும் தியானமல்ல. உள்ளத்தில் ஆத்மாகார வ்ருத்தியானது தொடர்ந்து இடம்பெறுதலே தியானம். சிரவணத்தின்போது, ஆத்ம தத்துவத்தைத்தான் சிந்திக்கிறோம். எனவே, இதுவும் ஒரு தியானமேயாகும்.
ஆனால், மனம் என்பது குரங்கைக் காட்டிலும் ஒன்றை விட்டு ஒன்று வேகமாகத் தாவக்கூடிய இயல்பு படைத்தது. அதனை கையாளுவது அத்தனை எளிதல்ல. மனம் என்பது பல்வேறு விதமான கவனச் சிதறல்களுடன் கூடியது, எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டிருக்கக் கூடியது. அதைப் பற்றி அர்ஜுனன் பின்னால் இதே அத்தியாயத்தில் கேள்வி கேட்கப் போகிறான். பகவானும் மனதின் இயல்பைக் குறித்துப் பதில் கூறப் போகிறார்.
எல்லோருடைய மனங்களும் அலைபாயக்கூடிய இயல்பு படைத்தவைதான். தாயின் மடியை விட்டு இறங்கி ஓடும் குழந்தை போல, கண்ணிமைக்கும் நேரத்தில் மனமானது புலனின்பப் பொருட்களின் பின்னால் சென்று விடுகிறது. ஒரு கார் எழுப்பும் ஓசை போதும், அதிலிருந்து பல்லாயிரம் எண்ணங்கள் தோன்றி விடுகின்றன. தன்னுடைய கார் நல்ல நிலைமையில் உள்ளதா? இல்லையா? தான் எத்தகைய கார் அடுத்து வாங்க வேண்டும்? என்பது போன்று பல்வேறு சிந்தனைகள் தோன்றுகின்றன. பிறகு ஆத்ம தியானம் எங்கே? கார் தியானம்தான்.
இது வெறும் பொருட்களால் ஏற்படும் கவனச் சிதறல் அல்ல. ஒரு குறிப்பிட்ட மனிதர் அல்லது உறவு முறையால் கூட இது ஏற்படலாம். பரதர் என்ற அரசர் தன்னுடைய அரசாட்சியைத் துறந்து காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். புலியால் துரத்தப்பட்டமான் ஒன்று தாவி ஓடி வந்து, இவரது ஆச்ரமத்துக்கு அருகில் குட்டி ஒன்றை ஈன்றுவிட்டு உயிர் துறந்தது. குட்டி மானை மிகுந்த கருணையோடு கவனித்து வந்த பரதர், தன்னுடைய நேரத்தையெல்லாம் அதற்காகச் செலவிட்டு, இறக்கும் தறுவாயினும் மானையே எண்ணி, அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தார் என்று பாகவத புராணம் கூறுகிறது. பிறகு, அடுத்த பிறவியில் மனிதராகப் பிறந்து, மிகுந்த விழிப்புணர்வோடு வாழ்ந்து பிறவாப் பெருநிலையை எய்தினார்.
நம்மை பற்றில் ஆழ்த்துவது எப்பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம், எவராக வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே, இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நம்முடைய பிரச்னையே அனைத்திலும் நாம் உரிமை கொண்டாடுவதுதான். வீடு, கார், உறவுகள் அனைத்திலும் நாம் உரிமை கொண்டாடுகிறோம். அனைத்து உறவுகளும், அனைத்துப் பொருட்களும் தாற்காலிகமாக, இறைவனிடமிருந்து நமக்கு வந்துள்ள பரிசுகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு எதுவும் எவரும் உண்மையில் சொந்தமல்ல என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய உடல், மனம், புத்தியும் கூட நம்முடையவை அல்ல. அவை, இறைவனின் கொடை என்பதை நினைவில் கொண்டால், மனதை புறப்பொருட்களிலிருந்து மீட்டெடுப்பது எளிது. ஓயாது புறத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனதை, இவ்வாறு உள்ளிழுத்து, மீண்டும் மீண்டும் தன்னுடைய உண்மை இயல்பாகிய பரம்பொருள் தத்துவத்தில் நிலைநிறுத்த முயற்சிக்க வேண்டும் என்ற கருத்தை பகவான் இந்தச் சுலோகத்தில் கூறியருளியுள்ளார். |
|
|
|