|
வீர சிவாஜியின் குரு சமர்த்த ராமதாசர், ராமபிரான் மீது அளவற்ற பக்தி கொண்டவர். ராமநாமத்தை பதின்மூன்று கோடி முறை சொன்னால், ராமசந்திரனின் தரிசனம் நிஜமாகவே கிட்டும் என்பது அவரது வாக்கு. அதனைக் கேள்விப்பட்ட பக்தர் ஒருவர் ராமநாம ஜபத்தை சொல்லத் தொடங்கினார். கூடவே தான் ஒவ்வொரு நாளும் சொல்வதை நோட்டு ஒன்றில் குறித்தும் வைத்துக்கொண்டார். ஒரு கோடி... இரண்டு கோடி... பதின்மூன்றுகோடி முறை சொல்லி முடித்தார். ராமதரிசனம் கிடைக்கவில்லை. ஒருவேளை கணக்கில் சிறிது முன்பின் இருக்கலாம் என்று மேலும் இரண்டுகோடி முறை சொன்னார். அப்போதும் ராமர் வரவில்லை. அவருக்கு கோபம் தலைக்கு ஏறியது.
சமர்த்த ராமதாசரின் சீடர்களுள் ஒருவரான ஸ்ரீதர ஸ்வாமிகளை தேடிப்போனார். உங்கள் குருநாதர் ஒரு ஏமாற்றுப்பேர்வழி. அவர் சொன்னபடி ராமநாமத்தை பதின்மூன்று கோடிமுறை சொல்லியும் என் முன் ராமர் வரவே இல்லை! என்று சொன்னபடியே, ராமநாமத்தைத் தான் சொன்னதற்கான கணக்கு எழுதி வைத்திருந்த நோட்டைத் தூக்கி அவர் முன் வீசினார். அமைதியாக அந்த நோட்டை எடுத்தார் ஸ்ரீதர ஸ்வாமிகள். ஒருமுறை அதனை உற்றுப் பார்த்தார். பிறகு வந்தவரைப் பார்த்தார். என் குருநாதர் பொய்யனல்லர். நீங்கள்தான் கணக்கை சரியாக எழுதவில்லை...! என்றார். கணக்குதான் சரியாக இருக்கிறதே.... கூடுதலாகவே இரண்டு கோடிகள் சொல்லியிருக்கிறேன்! எரிச்சலாகச் சொன்னார் வந்தவர்.
இல்லை... இந்த ஜபத்தை நீங்கள் செய்தபோது, உங்கள் மனைவியின் உடல்நலம் ஒருமுறை குன்றியது. அப்போது நீங்கள் இதுவரை செய்த புண்ணியத்தை பகவானுக்கு தருவதாகவும், மனைவியை பிழைக்கச் செய்யவேண்டும் என்றும் வேண்டினீர்கள். அப்போது நீங்கள் சொல்லியிருந்தது இரண்டுகோடி ராமநாமம். அதன் பிறகு உங்கள் மகன் தேர்வில் வெற்றிபெற மீண்டும் ஒருமுறை உங்கள் புண்ணியத்தை தந்தீர்கள். அப்போது உங்கள் கணக்கில் இருந்தது நான்குகோடி. எனவே, நீங்கள் பதினைந்து கோடிமுறை சொன்னதில், ஆறுகோடியின் கணக்கு நேராகிவிட்டதால் ஒன்பது கோடிதான் மீதம் இருக்கிறது. இன்னும் நான்கு கோடிமுறை சொல்லுங்கள். ராமர் நிச்சயம் உங்கள் முன்வருவார்! புன்னகையோடு சொன்னார். ஸ்ரீதர ஸ்வாமிகள்.
அதோடு, பகவான் நாமாவைச் சொல்வதில் கணக்குப் பார்க்காதீர்கள். அது என்ன பலன் தரும் என்றும் எதிர்பார்க்காதீர்கள். அதை அவனே கணக்கில் வைத்துக் கொள்வான். உரிய சமயத்தில் உங்களுக்கு அருள்வான்! ஸ்ரீதர ஸ்வாமிகள் சொன்னதை அங்கே இருந்தவர்கள் அனைவரும் புரிந்து கொண்டார்கள். |
|
|
|