|
சீடன் ஒருவன் தன் குருநாதரிடம் வந்து இறைவனை அடைவதற்கான வழியை போதிக்கும்படி கேட்டுக்கொண்டான். அவனுக்கு ஒரு கதையைச் சொன்னார் குருநாதர். ஓர் அரசன் இருக்கிறான். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவனை நெருங்குவதோ பேசுவதோ எளிமையான விஷயம் இல்லை. ஆனால், அந்த ராஜாவை சந்திக்க ஆசைப்பட்டான் பிரஜை ஒருவன். அதற்காக அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன், தன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோரும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். தன் சுற்றத்தாரையும் நண்பர்களையும் வைத்துக்கொண்டு ஊருக்காக ஒரு குளம் வெட்டித் தருகிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. இப்போது, நற்குணம் கொண்ட அந்த ராஜா என்ன செய்வார்?
தனது பிரதிநிதிகளை அனுப்பி, அந்த பிரஜையை தனது அரசவைக்கு வரவழைப்பார். அல்லது அவரே நேரில் சென்று அவனைச் சந்திப்பார். அவனோடு உரையாடி, பாராட்டிப் பரிசளித்துவிட்டு வருவார். என்று கூறிய குருநாதர் சற்று இடைவெளி விட்டு, மேலும் தொடர்ந்தார். இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அந்தப் பிரஜை. நீ என்ன முயற்சித்தும் அவனை நெருங்குவது கடினம். ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால், அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார் என்றார். சீடனுக்குப் புரிந்தது. குருநாதருக்கு நன்றி சொன்னான். நமது எண்ணங்களும், சொற்களும், செயல்களும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு நல்லது செய்யும் எனில், இறைவனை நாம் தேட வேண்டியதில்லை. அவரே நம்மைத் தேடி வருவார்! |
|
|
|