|
பிள்ளையார் பக்தன் ஒருவனுக்கு தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. தினம் தினம் பிள்ளையார் முன் அழுது புலம்பி தன்னை எப்படியாவது உயர்த்தும்படி வேண்டினான். ஒருநாள், விநாயகர் அவன் முன் தோன்றினார். உன் பிரச்னை என்ன? என்று கேட்டார். என்னை எல்லோரும் மட்டமாக நினைக்கிறார்கள். சோதனைகள் ஏராளமாக வருகின்றன. வாழ்க்கையில் அடிமேல் அடி விழுகிறது. என்னை ஏன் இப்படிப் படைத்தீர்கள் என்று கேட்டான். அவனுக்கு பதிலை நேரடியாகச் சொல்லாத பிள்ளையார், மறுநாள் காலை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொன்னார். அவனும் மறுநாள் அங்கே சென்றான். மிகவும் குப்பை கூளமும் பெரிய பெரிய கற்களும் நிறைந்ததாக இருந்தது அந்த இடம். இங்கே எதற்காக கடவுள் தன்னை வரச் சொன்னார் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது அவர் அங்கே வந்தார். இன்னும் சற்று நேரத்தில் இங்கே நடப்பதைப் பார் என்று சொன்னார்.
கொஞ்சநேரத்தில் அங்கே ஒருவன் வந்தான். அங்கே கிடந்த கற்களில் கொஞ்சம் பெரிதாக இருந்த ஒன்றைப் பார்த்தான். அதைக் கையில் எடுத்தான். அப்படியும் இப்படியும் திருப்பி எதையோ தேடினான். பிறகு அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். உடனே பிள்ளையார், அவனைத் தொடர்ந்து போய் என்ன செய்கிறான் என்று பார்! என்றார் பக்தனிடம். கல்லை எடுத்துக் கொண்டு போனவன் முதலில் அதனை சுத்தியலால் அடித்து தேவையான அளவில் உடைத்தான். பிறகு உளியால் செதுக்கி செதுக்கி முடிவில் அதை ஒரு பிள்ளையார் சிலையாக வடித்து முடித்தான். தான் செய்த சிலையை வீட்டு வாசலில் இருந்த மாடத்தில் வைத்து தீபம் ஒன்றை அருகே ஏற்றி வைத்தான். அவனோடு சேர்ந்து பலரும் அந்தப் பிள்ளையார் சிலையை வணங்கினார்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த பக்தனிடம் மீண்டும் வந்தார் கணபதி. பக்தனே, முதலில் கல்லைப் பார்த்தாய். பின் அது கடவுளானதையும் கண்டாய். அப்படித்தான் சோதனைகளை சந்திக்கத் தயங்காமல் இருப்பவர்களும், பிறர் மட்டம் தட்டுவதை பெரிதுபடுத்தாமல் இருப்போரும், தங்களைப் பற்றி தாங்களே தாழ்வாகக் கருதாமல் இருக்கிறவர்களும், உழைக்கத் தயங்காதவர்களும் தாங்களாகவே உயர்வடைகிறார்களே தவிர, நான் எவரையும் உயர்த்துவதோ தாழ்த்துவதோ கிடையாது! சொல்லி மறைந்தார். உயர்வடைய என்ன வழி என்பது அந்த பக்தனுக்குப் புரிந்தது. |
|
|
|