|
அரதத்தர் என்னும் சிவபக்தர் கோவிலுக்கு வந்த போது, அங்குள்ள தூணில் ஒரு தேவதாசியைக் கட்டி வைத்திருந்தனர். மக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றனர். கோவில் பொறுப்பாளர் அவளை சாட்டையால் அடிக்கவே, வலி பொறுக்காமல் கதறினாள். சிவாச்சாரியார் மனம் பதைக்க அழுதார். “அடித்தது அவளைத் தானே! இவர் ஏன் அரற்றுகிறார்?” என்றாள் கூட்டத்தில் ஒருத்தி. அதற்கு அவள் தோழி, “ அவள் மீது இரக்கம் வந்திருக்கலாம்” என்றாள். “அடி போடி! நெருப்பில்லாமல் புகையுமா? சிவாச்சாரியாருக்கும், தாசிக்கும் ரகசிய தொடர்பிருக்கும். அந்த பாசம் தான் கண்ணீராகக் கொட்டுகிறது” என்றாள் மற்றொருத்தி. பின் பொறுப்பாளர் அடிப்பதை நிறுத்தி விட்டு சிவாச்சாரியாரிடம்,“ ஐயா! இவள் கடந்த வாரம் முழுவதும் வராததால் கோவில் வேலைகள் முடங்கி விட்டது. அதற்கான தண்டனை தான் இது. இவளுக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார். சிவாச்சாரியார், “இவளை திருத்தும்படி கடவுள் உங்களை நியமித்திருக்கிறார். அதே போல் நானும் எத்தனையோ நாள் கோவிலுக்கு வராமல் இருந்திருக்கிறேன். அதற்குரிய தண்டனையை அளித்து என்னைத் திருத்தப்போவது யார் என்று எண்ணிப் பார்த்தேன். அழுகை வந்து விட்டது,” என்றார். இதைக் கேட்டபொறுப்பாளர் தாசியை விடுவித்து விட்டார். நீதி என்பது உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி எல்லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது இந்தக் கதை உணர்த்தும் தத்துவம்.
|
|
|
|