|
அறுவடை முடிந்த ஒரு வயல் வரப்பில் பட்டினத்தார் தலை வைத்து படுத்திருந்தார். உடம்பு முழுவதும் நெற்பயிரின் அடித்தாள் குத்தியது. துறவியான அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. அப்போது இரு பெண்கள் தண்ணீர் எடுக்க அந்த வழியாக சென்றனர். பட்டினத்தாரைக் கண்டதும் ஒருத்தி, “காவி கட்டிய துறவி என்றாலும் இப்படி அறுவடை செய்த வயலில் படுத்திருக்கிறாரே.. பாவம். உடம்பெல்லாம் வலிக்குமே! ” என்றாள். அதற்கு மற்றொருத்தி, “துறவி என்றாலும் தலையணை தேவைப்படுகிறதே.... வரப்பின் மீது தானே தலை வைத்து தானே தூங்குகிறார். இப்போதெல்லாம் துறவிகளுக்கு கூட சுகம் தேவைப்படுகிறது, என்று கேலி பேசினாள். பட்டினத்தார் காதில் இது விழுந்தது. உடனே வரப்பில் இருந்து விலகி தரையில் படுத்துக் கொண்டார். தண்ணீர் எடுத்த பெண்கள் மீண்டும் அந்த வழியாக வந்தனர். பட்டினத்தாரைக் கண்டதும், “இந்த துறவிக்கு இன்னும் பக்குவம் வரவில்லை போலும். அதனால் தான் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்டிருக்கிறார். இவரே இப்படி இருந்தால் சாதாரண மக்களின்நிலையை கேட்கவா வேண்டும்! என்றனர். இதைக் கேட்ட பட்டினத்தார், உலகம் இப்படித்தான் ஆயிரம் நாக்குடன் பேசும். இனி என் மனதிற்கு எது நியாயம் எனத் தோன்றுகிறதோ, அதையே செய்வேன்,” என முடிவெடுத்தார். |
|
|
|