|
ராமபட்டர், கவுரிதேவி தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. மத்வ மடத்தைச் சேர்ந்த மகான் வாகீச தீர்த்தரை சந்தித்து தங்கள் குறையைத் தெரிவித்தனர். “உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தையை மடத்திற்கு அளித்து விட வேண்டும். சம்மதமா?” என்றார். அந்த தம்பதி இதற்கு சம்மதமளிக்க தயங்கினர். வாகீச தீர்த்தர் அவர்களிடம், “சரி... ஒரு யோசனை சொல்கிறேன். உங்கள் வீட்டிற்குள் பிள்ளை பிறந்தால் நீங்களே வளர்க்கலாம். வீட்டிற்கு வெளியில் பிறந்தால் என்னிடம் ஒப்படைத்து விட வேண்டும்,” என்றார். ராமபட்டர் தம்பதியும் ஒப்புக் கொண்டனர். கவுரியும் கருவுற்றார். பிரசவகாலம் நெருங்கியது. ஒருநாள் அவள் துளசிபூஜை செய்து கொண்டிருந்த போது லட்சுமி தாயார், திருவிளையாடல் நிகழ்த்த திருவுள்ளம் கொண்டாள். அதன்படி, பசு ஒன்று கவுரியின் வீட்டருகில் வந்தது. அதற்கு உணவளிக்க கவுரி அருகில் சென்ற போது, அது ஓட ஆரம்பித்தது. அவளும் பின்தொடரவே, ஒரு மரத்தடியில் நின்றது. அப்போது கவுரிக்கு பிரசவவலி ஏற்பட, மரத்தடியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு வெளியில் பிறந்ததால் குழந்தையை வாகீச தீர்த்தரிடம் அவள் ஒப்படைத்தாள். பூவராகன் என்ற பெயரில் மத்வ மடத்தில் அந்தக் குழந்தை வளர்ந்தது. பிறக்கும் முன்பே இறையருள் பூரணமாக பெற்ற பூவராகன், பிற்காலத்தில் ‘வாதிராஜ தீர்த்தர்’ என்னும் மகானாக விளங்கினார். ஹயக்ரீவர் குதிரை வடிவில் வந்து இவரிடம் உணவு பெற்றார். |
|
|
|