|
எல்லா மனிதருக்குள்ளும் வைராக்கிய மனம் உண்டு; ஆனால், அது நல்லதற்கா, கெட்டதற்கா என்பதில் தான் விஷயம் உள்ளது. சிறுவன் ஒருவனின் வைராக்கியம், தெய்வத்தையே அவன் முன் நிறுத்திய வரலாறு இது. ஒருமுறை, தீர்த்த யாத்திரை செல்ல முடிவு செய்தார், அகத்தியர். அதனால், தான் பூஜித்து வந்த சாளக்கிராமம் அடங்கிய பெட்டியை, தன் சீடனான சிறுவன் ஒருவனிடம் ஒப்படைத்து, இப்பெட்டியை, பத்திரமாக வைத்திரு... தினமும், கவனமாக பூஜை செய்... என்று கூறிச் சென்றார். அவனும், தன் குருநாதர் சொன்னபடியே, பூஜை செய்ய துவங்கினான். இருப்பினும், விளையாட்டுப்பருவம் என்பதால், பூஜை செய்வதில் அவனுக்கு சிறு சோம்பல் ஏற்பட, நதிக்கரையில் தான் மலர் செடிகளும், நாவல் மரமும் இருக்கிறதே... நாம் ஏன் கஷ்டப்பட்டு தினமும் ஒவ்வொன்றாக கொண்டு வந்து பூஜை செய்ய வேண்டும்... மாறாக, பூஜைப் பெட்டியுடன் நதிக்கரைக்கு சென்று விட்டால் எளிதாக பூஜையை முடித்து விடலாமே... என எண்ணி, பூஜை பெட்டியை தூக்கிக் கொண்டு நதிக்கரைக்கே சென்று விட்டான்.
அப்போது, அங்கே, முனிகுமாரர்கள் பலர், கற்களை வீசி, கீழே விழும் நாவல் பழங்களை எடுத்து, உண்பதை பார்த்தான் சிறுவன். உடனே, அவனுக்கும் நாவல் பழம் சாப்பிடும் ஆவல் ஏற்பட்டது. கையிலிருந்த பூஜைப் பெட்டியை கீழே வைத்தவன், சுற்றுமுற்றும் கற்களை தேடினான். கற்கள் அகப்படவில்லை என்றதும், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பூஜை பெட்டியிலிருக்கும் சாளக்கிராமத்தை எடுத்து, பழங்கள் மீது வீசலாம்; பழங்களுடன், சாளக்கிராமமும் கீழே விழும். பழத்தை பொறுக்கிய பின், சாளக்கிராமக் கல்லை எடுத்து பெட்டியில் வைத்து விடலாம்... என்று நினைத்தவன், பெட்டியில் இருந்த கல்லை எடுத்து, பழங்களை நோக்கி வீசினான். பழங்களும் வீழ்ந்தன; ஆனால், சாளக்கிராமக் கல் மரக் கிளையில் சிக்கிக் கொண்டது. அம்மரத்தில் உள்ள பொந்தில் பாம்பு வசிப்பதால், சிறுவனுக்கு உதவ யாரும் முன் வரவில்லை. இதனால், குருவிற்கு என்ன பதில் சொல்வது என நினைத்து நடுங்கியவனுக்கு திடீரென ஓர் எண்ணம் உதித்தெழ, சாளக்கிராம கல் அளவில் இருந்த ஒரு நாவல் பழத்தை எடுத்து, சந்தனமிட்டு, பூஜைப் பெட்டியில் வைத்து விட்டான். அச்சமயம், தீர்த்த யாத்திரை சென்றிருந்த அகத்தியர், திரும்பி விட்டார்.
மறுநாள், பூஜைப் பெட்டியை திறந்து, சாளக்கிராமத்தை எடுத்த அகத்தியர், அது, கொள கொளவென்றிருந்ததைக் கண்டு திகைத்தார். விஷயத்தை அறிந்து, கோபத்துடன், பூஜா மூர்த்தியான நாராயணர் இல்லாமல், என் முன் நிற்காதே போ... என்றார். இதனால், எப்படியும் சாளக்கிராமக் கல்லுடன் தான் திரும்ப வேண்டும்...என தீர்மானித்து, கடுந்தவம் செய்தான், சிறுவன். அது, ஸ்ரீராமர் வனவாச காலத்தில் இருந்த காலம். அவர், சிறுவனுக்கு தரிசனம் தந்தார். உடனே, ராமபெருமானை அழைத்துக் கொண்டு, அகத்தியரிடம் போனான், சிறுவன். சாளக்கிராமத்திற்கு பதிலாக, அந்த நாராயணனையே குரு முன்னால் நிறுத்தினான், சீடன். அச்சீடன் தான், சுதீட்சண முனிவர். நல்லதில் இருக்கும் வைராக்கியம், தெய்வத்தையே நம்மிடம் வரவழைக்கும். |
|
|
|