|
அடர்ந்த காடு ஒன்றில் முனிவர் ஒருவர், வாழ்ந்து வந்தார். அவர் மனிதர்களிடம் நேசம் காட்டுவதைப் போலவே, எல்லா மிருகங்களிடமும் பாசமும், பரிவும் காட்டினார். உடல்நலமில்லா மிருகங்களுக்கு வைத்தியம் பார்த்து, அவற்றின் நோயைக் குணப்படுத்தினார். சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட, அவரை சந்தித்துச் சென்றன. காலப்போக்கில் முனிவர், மிருகங்களின், நல்ல நண்பர் என்று பெயரெடுத்து விட்டார். ஆனால், அந்நாட்டின் மன்னர், மிருகங்களுக்கு எதிரியாக இருந்தார். மன்னர் வேட்டைப் பிரியர். நாட்டு மக்களின் நலனில் காட்டும் அக்கறையை விட, மிருகங்களை வேட்டையாடுவதில் தான் அவருக்கு அக்கறை அதிகம்.கொடிய மிருகங்கள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில், காட்டில், மக்களின் நட மாட்டம் அதிகரித்தது. அவர்கள், மான்கள், முயல்கள் என்று சாதுவான பிராணிகளை வேட்டையாடிச் சென்றனர்; அத்துடன் மரங்களை வெட்டவும் ஆரம்பித்தனர். இத்தகைய நடவடிக்கையால், காட்டில் வசித்து வந்த மிருகங்கள் அச்சங்கொண்டன. மரங்கள் குறைந்ததால், மழை இல்லாமல் வறட்சி தலை தூக்கியது. மக்கள் பலவழிகளிலும் அவதியுற்றனர். காடு அழிந்து கொண்டிருப்பதையும், அதனால் நாட்டுக்குள் கேடுகள் வந்ததை பற்றியும், மன்னன் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
ஒருநாள் - முனிவரிடம் வந்து கை கட்டி நின்றது ஒரு முயல். என் அருமைக் குட்டி முயலே! எதற்காக வந்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார் முனிவர். முனிவரே! காடு அழிந்து கொண்டிருக்கிறது. எல்லாப் பிராணிகளுமே அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். மழையும் இல்லாததால் குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல், நாங்கள் அவதிப்படுகிறோம். எங்களது குறைகளுக்கு தாங்கள் தான் ஒரு முடிவு கூற வேண்டும், என்று மன்றாடி கேட்டது முயல். உன் கவலை எனக்குப் புரிகிறது. நாளை மன்னரையும், மக்களையும் சந்திக்கிறேன். விரைவில், உங்கள் கவலைகள் தீரும், என்று கூறினார் முனிவர். தன் கையில் மரக்கன்றுகளையும், விதைகளையும் எடுத்தபடி நகரத்தை நோக்கிப் புறப்பட்டார் முனிவர். நகரத்தைச் சென்றடைந்த முனிவர், அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார். அருகில் ஏகப்பட்ட மரக்கன்றுகளும், செடிகொடிகளும், பழக்கொட்டைகளும் இருந்தன. முனிவரைக் கண்ட ஒரு முதியவர் அருகே வந்து, தாங்கள் யார்? எதற்காக இந்தச் செடிகள்? என்று கேட்டார். நான் ஒரு முனிவர். காட்டில் நீண்ட நாட்கள் தவம் செய்து இருந்தேன். இந்த நகரத்தில் நிறைய பேருக்கு தீராத வியாதிகள் இருப்பதாக அறிந்தேன். அதைப் போக்கவே இங்கு வந்தேன், என்று கூறினார் முனிவர். அப்படியா? தாங்கள், சொல்வது முற்றிலும் உண்மைதான். நானும் கூட காசநோயால் அவதிப்படுகிறேன். அந்நோயை தாங்கள்தான் போக்க வேண்டும், என்று கேட்டார் முதியவர்.
ஐயா! பெரியவரே! காட்டில் வாழும் முயல், மான் போன்ற பிராணிகளின் இறைச்சியை சாப்பிடுவீர்களா? என்று கேட்டார் முனிவர். ஆமாம்! என்று கூறினார் முதியவர். உங்கள் வியாதிக்குக் காரணமே... அந்தப் பிராணிகளின் இறைச்சியை உண்பதுதான். நம்முடைய காடு பல வினோத மூலிகைகளையும், வேர்களையும், புற்களையுமுடையது. அவற்றை உண்டு தான், அந்த பிராணிகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைக் கொன்று, அதன் இறைச்சியை மனிதர்கள் உண்கின்றனர். அதனால் மனிதர்களுக்கு காசம், கபம் என்று பல வியாதிகள் ஏற்படுகிறது. எனவே, காட்டில் வசித்து வரும் பிராணிகளை வேட்டையாடி அதன் மாமிசத்தைப் புசிக்காதீர்கள், என்று கூறினார் முனிவர். பின், ஒரு மூலிகையை எடுத்து சாறு பிழிந்து அதை முதியவருக்குக் கொடுத்தார் முனிவர். அதைக் குடித்ததும் தனது காசநோய் குணமாகி விட்டது போல் உணர்ந்தார் முதியவர். மகிழ்ச்சி அடைந்த முதியவர், முனிவரின் காலில் விழுந்து வணங்கினார். பெரியவரே! உங்களுக்கு நான் கொடுத்த அந்தச் சாறு, இந்த மூலிகையினுடையதுதான்... இந்த மரக்கன்றை வளர்த்தால், உங்கள் குடும்பத்திற்கே இனி, அந்த வியாதி வராது. எனவே, இந்த மரக்கன்றை நீங்கள் வளருங்கள். இச்செய்தியை மற்றவர்களுக்கும் கூறுங்கள், என்றார். அப்படியே செய்கிறேன், என்று கூறி, முனிவரிடமிருந்து ஒரு மரக்கன்றை வாங்கி, மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்றார் முதியவர். நகரத்திற்கு வந்துள்ள முனிவர், தன் தவ வலிமையால், தீராத வியாதிகளையெல்லாம் தீர்த்து வைப்பதாக, நகரம் முழுவதும் செய்தி பரவிவிட்டது. ஏராளமான மக்கள் முனிவரிடம் வந்து தங்களுக்கு இருந்த நோய்களைக் கூறி, அவற்றை தீர்த்துக் கொண்டனர். எல்லாருக்கும் மரக்கன்றுகள், விதைகள், பழக்கொட்டைகள் கொடுத்து மரம் வளர்ப்பதன் அவசியத்தை விளக்கிக் கூறினார். முனிவரின் பெருமை அரண்மனைக்கு எட்டியது.
ஒருநாள் - மன்னர் தன் பரிவாரங்களுடன் முனிவரை வணங்கினார். மகா முனிவரே! எனக்கும் சில கவலைகள் உள்ளன. அவற்றைத் தாங்கள் தான் போக்க வேண்டும், என்று கூறினார் மன்னர். நாடாளும் மன்னனுக்கு என்ன கவலையோ, என்று கேட்டார் முனிவர். மாமுனிவரே! என் நாட்டில் இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயம் அழிந்துவிட்டது. உணவுப் பற்றாக்குறையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆகவே, தாங்கள் தான் இதற்கு ஒரு வழி கூறி, நாட்டில் செழிப்பு நிலவ உதவி புரிய வேண்டும், என்று கேட்டார் மன்னர். மக்களைப் பற்றி கவலைப்படுவதே மன்னருக்கு அழகு. மக்களின் நலம்தான் மன்னரின் நினைப்பாக இருக்க வேண்டும்; நான் நிச்சயம் உதவுகிறேன், என்று கூறிய முனிவர் ஏராளமான மரக்கன்றுகளை மன்னரிடம் கொடுத்தார். மாமுனிவரே! இவற்றை நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார் மன்னர். இந்த மரக்கன்றுகளை நட்டு, நாடு முழுவதும் மரம் வளர்க்க வேண்டும். பிறகு பாருங்கள், உமது கவலையெல்லாம் நீங்கிவிடும், என்று கூறினார் முனிவர். ஆண்டுகள் சில சென்றன. மக்களாலும், மன்னராலும் மரங்கள் வளர்க்கப்பட்டு நாடு முழுவதும் பசுமை காணப்பட்டது. நாடே சோலைவனமாகக் காட்சியளித்தது. மன்னர் தன் வேட்டைத் தொழிலை நிறுத்தியதோடு, வேட்டையாடு தலையும் தடை செய்தார். மக்கள் வாழ்வில் ஆரோக்கியம் தோன்றியது. பின், காட்டுக்குத் திரும்பினார் முனிவர். அங்கிருந்த விலங்குகள் முனிவருக்கு நன்றி தெரிவித்தன. |
|
|
|