|
அந்த ஆசிரமத்தில் நிறைய சீடர்கள் இருந்தனர். சிறந்த ஞானியான குரு, சீடர்களுக்கு வழக்கமான முறைகளில் போதனை செய்தோ, உரைகள் நிகழ்த்தியோ கற்பிக்கவில்ல. தினசரி அவர் தமது வேலைகளைச் செய்து கொண்டே, ஏதோ சொல்லிக் கொண்டே இருப்பார். சீடர்கள் அவற்றையெல்லாம் செவிமடுக்கவில்லை. தனக்குத்தானே பேசுவது குருவின் பழக்கம்போலும் என்றெண்ணியிருந்தனர். ஆண்டுகள் பல சென்றும், சீடர்கள் பெரிதாக எதையும் கற்கவில்லை. ஒருநாள் சீடன் ஒருவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, குருவே, தாங்கள் இதுவரை எங்களுக்கு எந்தவிதமான போதனையோ, உபதேசமோ அளிக்கவில்லையே, ஏன்? என்று கேட்டான். அமைதியாக அவர்களைப் பார்த்த குரு, தம்மைப் பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்து நடக்கலானார். சீடர்களும் பின் தொடர்ந்தனர். அவர்கள் ஒரு நதிக்கரையை அடைந்தனர். சீடன் ஒருவனை அழைத்து, கரையில் இருந்த கூலாங்கல் ஒன்றைக் கொண்டு வருமாறு பணித்தார் குரு. அவன் கொண்டு வந்த கல் வழவழப்பாக, உருண்டையாக இருந்தது. இந்தக் கல் எப்படி உருண்டையாக, வழவழப்பாக ஆனது தெரியுமா? என்று கேட்டார் குரு.
பல ஆண்டுகள், ஆயிரக்கணக்கான மைல் தூரம் நீரில் அடித்து வரப்பட்டதால் இவை உருண்டை வடிவம் பெற்றுள்ளன என்றனர் சீடர்கள். சரி, இப்போது அதை உடைத்துப் பாருங்கள் என்றார் குரு. சீடர்களும் அவ்வாறே செய்தனர். அதன் உள்ளே ஈரப்பசை இருக்கிறதா? என்று கேட்டார். அதெப்படி இருக்கும்? கல்தான் நீரை உறிஞ்சாதே என்று விடை வந்தது. குரு மறுபடியும் நடக்க ஆரம்பித்தார். சற்றுத் தொலைவில் இருந்த ஒரு குன்றையடைந்து, அதன் மேல் ஏறினார்கள். பாறைகள் நிறைந்திருந்த அந்தக் குன்றின்மேல் கப்பும், கிளையுமாகத் தழைத்திருந்தது ஒரு மரம்.
குரு சொல்லத் துவங்கினார், இதோ பாருங்கள், இந்தப் பெரிய மரம் ஒரு சின்ன விதையிலிருந்துதான் தோன்றியுள்ளது. இதைப் பராமரிக்க யாருமில்லை. வளமிக்க மண்கூட கிடையாது. இதன் வேர்கள் பாறையைத் துளைத்துக் கொண்டு சென்று தனக்கு வேண்டிய போஷணையைப் பெற்றிருக்கிறது. எதனால் தெரியுமா? இதற்கு, தான் உயிர் வாழ வேண்டும் என்ற துடிப்பு உள்ளதால்தான். அதேபோல் தான் ஞானத்தைச் சம்பாதிப்பதும். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்வேகம், துடிப்பு இருந்தால்தான் அது சாத்தியம். சற்றுமுன் பார்த்த அந்தக் கூழாங்கல் பல ஆண்டுகள் நீரில் மூழ்கியிருந்தாலும் நீரைக் கிரகித்துக் கொள்ளவில்லை. நீங்களும் நான் வேலை செய்து கொண்டே அவ்வப்போது சொல்லித் தந்த ஞானத் துளிகளைச் செவிமடுத்து, உள்வாங்கவில்லை. நீரையும், உணவையும் தேடிப் பாறையையும் பிளந்து செல்லும் மரத்தின் வேரைப் போல் உங்கள் ஆன்மிகத் தேடல் இருக்க வேண்டும் என்று விளக்கினார் குரு. சீடர்களின் மனதில் தெளிவு பிறந்தது. |
|
|
|