|
பரம ஞானியான ஒரு துறவி தன் சீடனுடன் பயணித்துக் கொண்டிருந்தார். அவர்கள் ஒரு குன்றின் அடிவாரத்தை அடைந்த போது இருள் கவியத் தொடங்கிற்று. ஜன சஞ்சாரமற்ற பிரதேசம்! துஷ்ட மிருகங்கள் மற்றும் குளிரிலிருந்து தப்பிக்க எங்காவது தங்க வேண்டுமே? தூரத்தில் சின்னதொரு வெளிச்சம் தெரியவே அதை நோக்கி நடந்தனர். அது ஒரு மிகவும் சிதிலமடைந்த குடிசை; எந்த நிமிடமும் விழுந்துவிடும் போல் இருந்தது. ஆனால் அங்கும் ஒரு குடும்பம் வசித்தது! குடும்பத்தலைவன், அவன் மனைவி, ஒரு மகன். அவர்கள் வழிப்போக்கர்களை உள்ளே அழைத்துப் பாலும், பழமும் தந்து <உபசரித்தனர். துறவி, அய்யா! இந்த நிர்ஜனப் பிரதேசத்தில் எப்படி வகிக்கிறீர்கள்? என்று ஆச்சரியப்பட்டார். எஜமானன், என்னிடம் ஒரு பசு இருக்கிறது. அதன் பாலைச் சிறிது எங்கள் தேவைக்கு வைத்துக் கொண்டு மிகுந்ததை விற்று, வேண்டிய சாமான்கள் வாங்கிக் கொள்கிறோம். இந்தக் காமதேனுதான் எங்கள் ஜீவாதாரம்! என்று பதில் சொன்னான். மறுநாள் சூர்யோதயத்திற்கு முன்னரே விழித்துக் கொண்டே துறவி சீடனை எழுப்பி, பசுவைக் கட்டியிருக்கும் கயிற்றை அவிழ்த்து அது மீண்டும் அவர்களுக்குக் கிடைக்காதவாறு எங்கேயாவது விரட்டிவிடு. அடுத்த கிராமத்தில் சந்திப்போம் என்று சொல்லிப் புறப்பட்டார்.
சீடனால் குருவின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. ஏழ்மையிலும் வந்த விருந்தினர்களை அன்பாக உபசரித்துத் தங்க இடமும் கொடுத்த இவர்களுக்கு வாழ்வதாரமான இந்தப் பசுவையும் விரட்டி விட்டால் இவர்கள் எப்படி வாழ்வார்கள்? சே, இது மகா பாவம்! இந்த ஈனச் செயலை என்னால் செய்ய இயலாது என்றெண்ணிக் கலங்கினான். ஆனால் குருவின் வார்த்தையை மீறவும் முடியாது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு பசுவைக் கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு குருவிடம் வந்தான். வழிநெடுக அவன் மனம் வருந்தியது. வயதான குருவின் பேச்சைக் கேட்டுத் தவறு செய்து விட்டேன். என்ற குற்ற உணர்வு அவனை வாட்டியது. ஆனால் தன் குருவை நன்றாக அறிந்திருந்த சீடன் அவர் சொன்னதில் ஏதோ அர்த்தம் இருக்க வேண்டும்; இதுவரை அவர் யாருக்கும் கெடுதல் செய்தவரல்ல என்று சமாதானம் செய்து கொண்டாலும் அவன் முகம் கோபம், வருத்தம், பச்சாதாபம் இவற்றால் வாடியே இருந்தது. குரு அதைக் கவனிக்காதவாறு வழக்கம்போல் அமைதியாக இருந்தார்! சில ஆண்டுகள் கழிந்தன. சீடனால் குற்ற உணர்விலிருந்து மீண்டுவரவே முடியவில்லை. கடைசியில் ஒருநாள் பொறுக்க முடியாமல் தன் உள்ளக்குமுறலை குருவிடம் பகிர்ந்துகொண்டான்.
குரு சீடனை அந்த வீட்டிற்கு மீண்டும் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி அனுப்பினார். சீடன் மறுபடி அதே வீட்டை அடைந்தான். ஆனால் இதென்ன மாயம்! அந்த இடத்தில் பெரியதொரு இரண்டடுக்கு வீடு இருந்தது! வீட்டின் முன்னால் சாரட்டுவண்டிகள்! சுறுசுறுப்பாக நடமாடும் வேலையாட்கள்! அழகிய பூக்கள், பழங்கள் நிறைந்த தோட்டம்! சீடனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை! வீட்டையடைந்து எஜமானனைக் கண்டான். அவனும் முன்பிருந்த ஏழ்மை நிலையில் இல்லை; விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் பூண்டிருந்தான். தான் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்ததைச் சொல்லி அவன் இத்தனை பணக்காரனான தன் ரகசியம் என்னவென்று கேட்டான். அதற்கு அவன், என் பசுகாணாமல் போய்விட்டது. எவ்வளவோ, தேடியும் கிடைக்கவில்லை. என் வாழ்வாதாரமே போய்விட்டதாக எண்ணினேன். ஆனால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறதல்லவா? வேறு ஜீவனோபாயம் தேட வேண்டிய கட்டாயம்! காட்டில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை ஊரில் கொண்டு சென்று விற்றோம். நல்ல வருமானம் வந்தது. அதன் பின் திரும்பிப் பார்க்கவே இல்லை! நிறையக் கதவுகள் திறந்து கொண்டன. அதுவரை பசுதான் என் பலம் என்றிருந்தேன். அது இல்லாமல் போனதும் அதே என் துர்ப்பலமாக இத்தனை ஆண்டுகள் இருந்ததென்பதைத் தெரிந்து கொண்டேன். என் திறமைகளும் விரிந்தன! என்று விவரித்தான்! வாழ்க்கையின் பரிமாணங்கள் பல இருந்தாலும் ஒரே பக்கத்தைப் பற்றிக் கொண்டு பந்தனத்திற்கு ஆளாகிறோம்; கட்டுக்கள் அறுந்தால் விடுதலையே அல்லவா? |
|
|
|