|
ஒரு சமயம் குருகுலத்தில் சீடர்கள், ஏன் தெய்வம் சிலருக்கு மட்டும் தொடர்ந்து துன்பம் கொடுக்கிறது? என சந்தேகம் எழுப்பினர். சிறிய கதை மூலம் குரு அதற்கு விளக்கமளித்தார். ஒரு சமயம் காட்டுக்கு வேட்டையாட தன் மனைவியுடன் வந்த வேடனுக்கு எதுவும் கிட்டவில்லை. மிகுந்த பசியால் வாடிய நிலையில், ஒரு குளத்தில் தாமரை மலர்கள் அழகாய் மலர்ந்திருப்பதைக் கண்டார்கள். அவற்றைப் பறித்து அருகிலுள்ள காசி நகரில் விற்று, பணம் சம்பாதித்து, பசியாறலாம் என முடிவு செய்து, அந்நகரத்தை அடைந்தனர். ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் பூக்கள் ஏதும் விற்பனை ஆகவில்லை. இறுதியில், ஓம்காரேஸ்வரர் கோயிலில் இளைப்பாறினார்கள். அங்குள்ள சிவனின் தோற்றம் கண்டு வியந்து தம்மை அறியாமல் அம்மலர்கள் அனைத்தையும் சிவன் சன்னதியில் வைத்து, அழகு பார்க்கத் துவங்கினர். அவன் மனைவி கோயில் பிராகாரங்களை தூய்மைப்படுத்தத் துவங்கினாள். சிலநாட்களில், சிவபூஜைக்கு மலர் கொணர்வதும், கோயிலைச் சுத்தப்படுத்துவதுமே இந்தத் தம்பதியரின் வாழ்க்கை முறையாயிற்று.
மறுபிறவியில் அவர்கள் காசியில் மீண்டும் பிறந்தனர். ஒருநாள் ஓம்காரேஸ்வரர் கோயிலைக் கண்ட கணவன், பூர்வ ஜன்ம பக்தியால் உந்தப்பட்டு சிவன் முன் அமர்ந்து தியானம் செய்யலானார். அப்போது அவருக்குக் காட்சியளித்த இறைவன், அவரிடம் ஒரு தாமரை மலரைக் கொடுத்து, இந்த மலர், வாகனமாய் இருந்து உன்னை சகல சம்பத்துகளுக்கும் அரசனாக்கும் என ஆசி கூறினார். புஷ்பமே வாகனமாய் அவரை சுமந்து சென்றதால் புஷ்பவாகனன் என அழைக்கப்பட்ட அவர் புஷ்பகத் தீவிற்கு மன்னர் ஆனார். அவர் மனைவியின் பெயர் லாவண்யாவதி. ஒரு சமயம், தன் வாழ்க்கை போகமும் யோகமுமாய் அமைய என்ன காரணம் என அறிய மன்னன் விரும்பினான். ஒரு முனிவரை சந்தித்து அது குறித்து கேட்டான். மன்னரின் பூர்வ ஜன்மம் பற்றியும், சிவத்தொண்டு பற்றியும் அவர் கூறினார். அதைக் கேட்டதும் மன்னர் கண்களில் நீர் வழிந்தது. சாதாரண வேடனாயிருந்த தம்மை ஒரு நாட்டுக்கே அரசனாக்கிய ஈஸ்வரனின் கருணையை எண்ணி மெய்சிலிர்த்தார். பிள்ளைகளிடம் அரசை ஒப்படைத்துவிட்டு, எளிய பக்தனாக ஓம்காரேஸ்வருக்கு தொண்டு செய்ய விரும்பி, காசி சென்றார். இதன் மூலம் நம் பூர்வ ஜன்ம செயல்களால்தான் இப்பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுகிறது என்பதும், தெய்வம் சிலருக்கு மட்டும் தொடர்ந்து கஷ்டங்களைக் கொடுக்கிறார் என எண்ணுவது சரியல்ல என்பதும் சீடர்களுக்கு மிகத் தெளிவாயிற்று. |
|
|
|