|
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள தாள்ளப்பாக்கம் எனும் கிராமத்தில் பிறந்த அன்னமய்யா தனது கீர்த்தனைகளால் திருமலையான் உள்ளத்தினை கொள்ளைக் கொண்டார். இவர் எம்பெருமானின் நந்தகம் என்ற வாளின் வடிவமாகவே கருதப்படுகிறார். இவர் ஆந்திர சாஹித்தியத்தில் பதகவிதை பிதாமஹர் என்ற பெயரினைப் பெற்றவர். இவருடைய எண்ணிலடங்கா கீர்த்தனைகளில் பல நமக்கு கிடைக்காமலே போயின. கிடைத்த கீர்த்தனைகளும் திருமலைக் கோயிலில் உண்டியலுக்கருகேயுள்ள அன்னமய்யா பாண்டாகாரம் என்ற அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினரால் பத்திரப்படுத்தபட்டுள்ளது. சாதி வேறுபாடு நிறைந்த அந்த காலக்கட்டத்தில் தனது கீர்த்தனையால் அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்தில் ப்ரஹ்மம் ஒக்கட்டே... அதாவது அனைவருக்கும் எம்பெருமான் ஒன்றே என்ற பொருள் பொதிந்த கீர்த்தனைகள் மூலம் அவருடைய பரந்த மனத்தினை அறியலாம். அவரது படைப்புகளில் வேங்கடேஸ்வரா சதகம் மிகவும் முக்கியமானது. அன்னமய்யாவின் பாடல்கள் தினமும் நாம் தினசரி சேவையான சஹஸ்ர தீபாலங்கார சேவை யில் கேட்டு மகிழலாம்.
மேலும், அந்திர மாநிலத்திலுள்ள தரிகொண்டா என்னும் கிராமத்தில் பிறந்த வெங்கமாம்பா திருமலையான் மீது மிக்க பக்தியைக் கொண்டவர். சிறுவயதிலிருந்தே விஷ்ணு பக்தரான அவர் பல நூல்களை இயற்றி அருளினார். திருமலையில் தும்புரு குகையில் இருந்து திருமலையான் சேவை சாதித்தார். தினமும் அவர் திருமலையானை இரவு நடைசாற்றிய பின்னர் பாடல்களை பாடும் வழக்கத்தினைக் கொண்டவர். சிறிது காலத்திற்கு பின்னர் திருமலையானின் அருளால் எல்லோராலும் அறியப்பட்டு, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு, பாடல்களைப் பாடினார். அவர் பாடல்கள் நிறைவுப்பெற்றவுடன் தினமும் ஆரத்தி கொடுத்து நடை சாற்றப்பட்டது. இன்றும் வெங்கமாம்பா முத்து ஆரத்தி என்ற பெயருடன் தினமும் ஆரத்தி திருமலையானுக்கு அளிக்கப்படுகிறது. இவருடைய பிருந்தாவனம் திருமலை மாடவீதிக்கருகிலேயே அமைந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நித்ய அன்னதான சேவை மாத்ரு தரிகொண்ட வெங்கமாம்பா என்ற வளாகத்திலே நடைபெறுவது ஓர் சிறப்பு அம்சமாகும். |
|
|
|